ழகரம்
(முதல் பருவம்)
சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது, சில சூழல்களில் இடையில் க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துகளுள் ஏதேனும் ஒன்று தோன்றும். அதனை வல்லினம் மிகும் இடங்கள் எனவும் அவ்வெழுத்துகளுள் எதுவும் தோன்றவில்லை எனில், வல்லினம் மிகா இடங்கள் எனவும் அறிந்துகொள்ளலாம். வல்லினம் மிகாமல் வரும் இடங்களைப் பின்வரும் கதைப்பகுதி வாயிலாக அறிந்துகொள்வோம்.
ஓர் ஊரில் கழுதையையும் நாயையும் ஒருவன் வளர்த்து வந்தான். நாயைக் கண்டு கழுதை பொறாமை கொண்டது. ஒருநாள், அது தனக்குத்தானே பேசிக்கொண்டது. “நான் எவ்வளவு சுமை சுமக்கிறேன். ஆனால், என்னுடைய உரிமையாளன் என்னிடத்தில் இரக்கம் காட்டுவதே இல்லை. எப்பொழுது பார்த்தாலும் அடித்து உதைத்துத் தொல்லை கொடுக்கிறான். இவ்வீட்டில் நாயும் இருக்கிறது. அது எந்த வேலையையும் செய்வது இல்லை. உரிமையாளனோ அதன்மீது மிகுந்த அன்பைக் காட்டுகிறான். நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எனக்குச் சிறிதளவே உணவு தருகிறான். நாய், வீட்டிலுள்ள அனைவரிடத்திலும் கொஞ்சிக் குலாவுகிறது. இரண்டு காலையும் எடுத்து அவர்களுடைய மடிமீதும் வைக்கிறது. அவர்களோடு தானும் விளையாடுகிறது. இவற்றால்தான், நாய்மீது அவர்களுக்கு அன்பு இருப்பதாகத் தெரிகிறது. நானும் நாயைப் போலவே நடந்துகொண்டால் என்னிடத்திலும் அவர்கள் அன்புடன் நடந்துகொள்வார்கள்“ என எண்ணியது. ஒருநாள், உரிமையாளன் கட்டிலின்மீது படுத்து உறங்கிக் கொண்டிருக்க, கழுதை தன் இரண்டு காலையும் தூக்கி அவன் தலைமேல் வைத்தது. இச்செயலால் அச்சம் அடைந்த உரிமையாளன் தடி ஒன்றை எடுத்துக் கழுதையை அடித்தான். இந்த நிகழ்வின் மூலம், “நாம் மற்றவர்களைப்போல் சிறப்படைவதற்குத் தேவையற்ற செயல்களைச் செய்வோமாயின், கிடைக்கும் பலன் இவ்வாறுதான் இருக்கும்.” என்பதைக் கழுதை புரிந்துகொண்டது.
மேற்கண்ட கதைப்பகுதியில் வண்ணமிட்ட சொற்களுக்கு இடையே வல்லினம் மிகவில்லை. வல்லொற்று மிகா இடங்களை அறிந்து எழுதுவதற்குப் பல விதிகள் உள்ளன. அவற்றுள் சில விதிகளை இங்கு அறிந்துகொள்வோம்.
விதி 1
‘அது’ என்னும் சுட்டுச் சொல்லின்பின் வல்லினம் மிகாது.விதி 2
எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது.விதி 3
’எவ்வளவு’ என்னும் அளவுப் பெயரின்பின் வல்லினம் மிகாது.விதி 4
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.விதி 5
இரண்டு என்னும் எண்ணுப்பெயரின்பின் வல்லினம் மிகாது.விதி 6
மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.