ழகரம்
(முதல் பருவம்)
உலகில் வாழும் உயிர்களுள் மனித இனம் சிறப்பு வாய்ந்தது. “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது“ என்று ஔவையார் கூறியுள்ளார். இத்தகைய மனித இனம் நல்ல உடல்நலத்தையும் மனநலத்தையும் பெற்றிருப்பது மேலும் சிறப்பாக அமையும். நோய் அணுகாது வாழ்ந்தால் நல்ல உடல்நலத்தைப் பெறலாம். உடல்நலம் என்பது, ஒருவரின் உடல், மனம் ஆகிய இரண்டும் நலத்துடன் இருப்பதைக் குறிக்கும்.
உடலுக்கும் உயிருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் சிறப்பை உணர்ந்தே, “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“ என்று திருமூலர் பாடியுள்ளார். உடலும் உயிரும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகின்றன. உடல்நலம் உயிருக்கு நன்மையையும் உடல்நலம் இன்மை உயிருக்குத் தீமையையும் ஏற்படுத்துகின்றன. உடலும் உயிரும் ஒன்றிணைந்து செயல்படுவதால் நாம் நோய்நொடியின்றி நெடுநாள் வாழ்கிறோம். இதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. சத்தான உணவு, ஓய்வு, உடற்பயிற்சி, மருத்துவப்பரிசோதனை, சுற்றுச்சூழல் ஆகியவை இன்றியமையாத காரணிகளாக உள்ளன.
நாம் உடல்நலத்துடன் வாழச் சத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டும். பழங்களுள் மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை, மாதுளை, பப்பாளி, கொய்யா முதலியவை சத்துள்ளவை. |
|
நாம் நினைத்த நேரத்தில் உணவை உண்ணக் கூடாது. நன்கு பசித்த பிறகே உணவை உண்ணவேண்டும். அளவோடு உண்பது நலம் தரும். மேலும், உணவினை நன்றாக மென்று நொறுங்க உண்ணவேண்டும். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது‘ என்பது பழமொழி. உணவு உண்ணும் முறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நம் உடலுக்கு நோய் ஏற்படாது; அதனால், தேவையற்ற மருந்துகளை உண்ணும் நிலையும் ஏற்படாது என்பதை “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...“ என்னும் குறளின் மூலம் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
உடலானது உயிரின் கூடாகவும், உணர்வுகளின் வீடாகவும் விளங்குகிறது. இத்தகைய உடலை நாம், நன்முறையில் பேணுதல் வேண்டும். உடலைப் பேணுவதால் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்; உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
இளமைக் காலத்தில் பேணப்படும் உடல்நலமே முதுமைக் காலத்தில் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கும். சரியான தூக்கம், முறையான உடற்பயிற்சி, தியானம் ஆகியவை உடலுக்கு வலிமை சேர்க்கும். உடற்பயிற்சி செய்வதற்குக் காலை நேரமே சிறந்தது. உடல்நலம் காப்பதில் நடைப்பயிற்சி என்பது அனைவராலும் எளிமையாக கடைப்பிடிக்க கூடியதாகும். அது மட்டுமில்லாமல் தேவையான ஓய்வையும் மேற்கொண்டால் மேலும் நன்மை விளையும். தியானம் செய்யும்போது மூளையும் உள்ளமும் ஒருநிலைப்படுவதால் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் முடிகிறது. ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்‘ என்னும் பழமொழி, நல்ல உடல்நலத்தின் சிறப்பைக் குறிக்கிறது. நல்ல உடல்நலம் வேண்டுமெனில் உடல் இயக்கம் சரியாக நடைபெற வேண்டும். அதற்கு உயிர்ச்சத்துகள் தேவை. ஆகையால், உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உண்டு, உடல் வளம் பெறுவோம். மனநலத்தையும் காத்து, நோய் அணுகாமல் நீடூழி வாழ்வோம் |
|
| 1. | மானிடர் | - | மனிதர் | ||
| 2. | அணுகாது | - | சேராது | ||
| 3. | பேணுதல் | - | காத்தல் | ||
| 4. | யாக்கை | - | உடல் | ||
| 5. | உயிர்ச்சத்துகள் | - | விட்டமின்கள் |
உடல் நலத்துடன் வாழ்வதற்குச் சத்தான உணவு, ஓய்வு, உடற்பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, சுற்றுச்சூழல் ஆகியவை இன்றியமையாத காரணிகளாக உள்ளன.
உடல்நலத்துடன் வாழ சத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டும். பழங்களுள் மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை, மாதுளை, பப்பாளி முதலியவை சத்துள்ளவை. கீரைகளுள் முருங்கை, பொன்னாங்கண்ணி, கரிசாலை, சிறுகீரை, அகத்தி முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாசிப்பயறு, அவரை, மொச்சை போன்ற பயறு வகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, கேழ்வரகு, கம்பு போன்றவை உடலுக்கும் மிகவும் நன்மை தரும் உணவுகளாகும். ஊண் விரும்புவர்கள் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். இத்தகைய சத்தான உணவுகள் உடல்நலத்தைக் காக்கும்.
உடலைப் பேணுவதால் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்
உடலுக்கும் உயிருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. உடலும் உயிரும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகின்றன. உடல் நலம் உயிருக்கு நன்மையையும் உடல் நலம் இன்மை உயிருக்குத் தீமையையும் ஏற்படுத்துகிறது. உடலும் உயிரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் நோய் நொடியின்றி நெடுநாள் வாழ முடிகிறது.
நினைத்த நேரத்தில் உணவை உண்ணக்கூடாது. நன்கு பசித்த பிறகே உணவை உண்ண வேண்டும். அளவோடு உண்பது நலம் தரும். மேலும், உணவினை நொறுக்கித் தின்ன வேண்டும். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பது பழமொழி. உணவு உண்ணும் முறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நோய் ஏற்படாது.