ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

26.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

பின்வரும் படங்களைப் பார்த்துக் கதை உருவாக்குக.

26.11 உயர்நிலைத்திறன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்கு எந்தத் தலைப்பு பொருந்தும்? கதையைப் படித்துத் தேர்ந்தெடுத்துக் கூறுக

உழவர் ஒருவர் தம் மகன்களை அழைத்தார். ”எனக்கு வயதாகிவிட்டது. இனி வேலை செய்ய இயலாது. நான் சேர்த்து வைத்த செல்வத்தை வயலில் புதைத்து வைத்திருக்கிறேன். அவற்றைத் தேடியெடுத்து, நீங்கள் நால்வரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். சில மாதத்திற்குப் பின்னர், அந்த உழவர் உடல்நலமின்றி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவருடைய மகன்கள் இதுவரை வேலை எதுவும் செய்யாமல் சோம்பித் திரிந்தனர். இப்போது, வேலை செய்தால்தான் உணவு கிடைக்கும் என்ற நிலைக்கு ஆளாயினர். ஆகையால், தமது தந்தை கூறிய புதையலைத் தேடி, நால்வரும் வயலுக்குச் சென்றனர். அந்நிலத்தை ஓர் அங்குலம்கூட விடாமல் எல்லா இடத்திலும் தோண்டினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த புதையல் கிடைக்கவில்லை. அப்போது அங்கு வந்த பெரியவர்கள், ”புதையல் கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். இப்போது நிலத்தை நன்றாகத் தோண்டி, செம்மைப்படுத்தியிருக்கிறீர்கள். எனவே, விதை விதைத்து, நீர் ஊற்றி, பயிர் வளரச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். மகன்களும் பெரியவர்கள் சொல்வது சரிதான். நிலம் நன்கு பண்படுத்தப்பட்டுள்ளது. இப்போது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று எண்ணினர். அவ்வாறே செய்தும் முடித்தனர். அவர்கள் எதிர்பார்த்தவாறே நல்ல விளைச்சல் கிடைத்தது. அவற்றை விற்று நால்வரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். ’உழைப்புதான் செல்வம். அதுதான் உண்மையான புதையல்’ என அவர்கள் புரிந்துகொண்டனர்.

1. உழைப்பே உயர்வு
2. எதிர்பாராத புதையல்
3. உழவு செய்வோம்

26.12 செயல்திட்டம்

இன்றைய மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு சாதனைகளைக் காணொலியாகத் தயாரித்து வருக.