ழகரம்
(முதல் பருவம்)
பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களால் ஒதுக்கப்பட்ட மாணவர் ஒருவர் பின்னாளில் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவெடுத்தார். உலகம் இன்றும் அவரை “கண்டுபிடிப்புகளின் அரசன்” எனக் கூறி மகிழ்கிறது. அவர்தாம் தாமஸ் ஆல்வா எடிசன்.
தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மிலன் என்னும் ஊரில் பிறந்தார். அவர் பெற்றோர் சாமுவேல் எடிசன், ஜான்சி மேத்தியூஸ் ஆவர். எடிசன், இளம்வயதில் ஸ்கார்லெட் காய்ச்சலினால் (Scarlet fever) பாதிக்கப்பட்டார். அதனால் அவருக்குச் செவிப்புலன் குறைபாடு ஏற்பட்டது. இதனால், நான்கு வயதுவரை இயல்பாகப் பேச இயலவில்லை. அப்படிப்பட்ட சூழலிலும்கூட, அவருக்கு எந்தவொரு நிகழ்வையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் அதில் கேள்வி கேட்கும் பழக்கமும் இருந்தன.
எடிசன் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால், தமது எட்டாவது வயதில்தான் பள்ளிக்கூடம் சென்றார். சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் எடிசனின் ஆசிரியர், எடிசனுக்குப் படிப்பு வரவில்லை; எத்தனை முறை சொல்லியும் புரிந்துகொள்வதில்லை. இனி, படிப்பைத் தொடரமுடியாது என்று கூறி, அவரை வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், மனவேதனை அடைந்த எடிசனின் தாயார், தம் மகனின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என நினைத்தார். ஆகையால், வீட்டிலிருந்தே மகனுக்குக் கல்வியறிவு புகட்டினார். மேலும், ஊக்கமளிக்கக் கூடிய வகையில் அறிவுரைகளையும் கூறினார். ‘‘எதற்கும் அச்சப்படாதே, தொடர்ந்து முயற்சி செய், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள், கற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளாதே, தொடர்ந்து உன்னை மேம்படுத்திக் கொள்“ என ஊக்கம் அளித்தார்.
எடிசனின் முதல் ஆராய்ச்சி என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் எல்லாருக்குமே பெரிய ஆர்வம் இருக்கும். ஆம், அந்த ஆராய்ச்சி அவருடைய ஐந்தாவது வயதில் நடந்தது. முட்டைகளின் மேல் தாய்க்கோழி அமர்ந்து இருந்தது. சிலநாள் கழித்து அந்த முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்தன. இதனைக் கண்ட எடிசனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தீர்த்துக்கொள்ள சில முட்டைகளின் மேல் அவரும் கோழியைப்போல் அமர்ந்தார். இத்தகைய ஆராய்ச்சியை அவரது குடும்பம் கண்டுபிடிக்கும்வரை, அவர் அதைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்தார். இதுபோல, தாம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வைக் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினார்.
எடிசனின் முதல் கண்டுபிடிப்பான ‘மின்சார வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு’ 1869ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. தமது எழுபத்தைந்தாவது வயதில்கூட நாள்தோறும் பதினெட்டுமுதல் இருபது மணி நேரம்வரை வேலை செய்து வந்தார். தமது வாழ்நாளில் 1328 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை கண்டுபிடிப்புகளுக்கு உரிமையுடையவராய் இருந்தும் அமைதியாக “நான் இப்பொழுதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றேன்” என்று அடக்கத்துடன் கூறினார் அந்த மாமேதை. உலகில் இன்று நடக்கும் அத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்திட்டார். நம் கண்முன் ஒளிரும் மின்விளக்கினைக் கண்டுபிடித்தவரும் தாமஸ் ஆல்வா எடிசனே ஆவார்.
எடிசன் தமது 84ஆம் வயதில், 1931ஆம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் நாள், நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஹெர்பர்ட் ஹூவர், எடிசன் உடல் அடக்கத்தின்போது, அமெரிக்கா முழுவதும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை ஒரு மணித்துளி அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது புகழுடல் அடக்கம் செய்யப்பட்டது. நியூயார்க்கில் மாலை 9:59 மணிக்குச் சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! தெருவில் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளைத் தவிர, மற்ற எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஆனால் எடிசன் ஆத்மாவாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர்விட்டு, உலகம் முழுவதும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!
| 1. | விஞ்ஞானி | - | அறிவியல் அறிஞர் | ||
| 2. | மனவேதனை | - | மனவருத்தம் | ||
| 3. | அச்சப்படாதே | - | அஞ்சாதே | ||
| 4. | சந்தேகம் | - | ஐயம் | ||
| 5. | மாமேதை | - | சிறந்த அறிஞர் |
தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மிலன் என்னும் ஊரில் 1847ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் பிறந்தார்.
எடிசன், இளம் வயதில் ஸ்கார்லெட் என்னும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார். அதனால் அவருக்குச் செவிப்புலன் குறைபாடு ஏற்பட்டது. இதனால் நான்கு வயது வரை இயல்பாகப் பேச இயலவில்லை.
“எதற்கும் அச்சப்படாதே, தொடர்ந்து முயற்சி செய், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள், கற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்ளாதே, தொடர்ந்து உன்னை மேம்படுத்திக் கொள்” என எடிசனுக்கு அவர் தாயார் ஊக்கமளிக்கக் கூடிய வகையில் அறிவுரைகளைக் கூறினார்.
எடிசன், முட்டைகளின் மேல் தாய்க்கோழி அமர்ந்து இருந்தது. சிலநாள் கழித்து அந்த முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்தன. இதனைக் கண்ட எடிசனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தீர்க்க தானும் அது போல் முயன்றார். இது போல, தான் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வைக் குறித்தும் சிந்தித்து ஆராயத் தொடங்கினார்.
தாமஸ் ஆல்வா எடிசன்
எடிசன் உடல் அடக்கத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவரின் ஆணைக்கிணங்க அமெரிக்கா முழுவதும் மின்விளக்குகள் ஒரு மணித்துளி அணைக்கப்பட்டது.