ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.3 மொழிக்கூறு

நேர்க்கூற்று – அயற்கூற்று

ஒருவர் நேரே கூறுவதுபோல் இருப்பது நேர்க்கூற்றுத் தொடர்.

நேர்க்கூற்று
“முகிலா, நான் நாளை ஊருக்குச் செல்கிறேன்” என்று கண்ணன் கூறினான்.

ஒருவர் நேரே கூறியதைப் படர்க்கையில் மாற்றிக் கூறுவது அயற்கூற்றுத் தொடர்.

அயற்கூற்று
தான் அடுத்த நாள் ஊருக்குச் செல்வதாகக் கண்ணன் முகிலனிடம் கூறினான்.
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது ஏற்படும் மாற்றங்கள்
நேர்க்கூற்று அயற்கூற்று
இன்று அன்று
நாளை மறுநாள்
நேற்று முன்னாள்
இப்பொழுது அப்பொழுது
இது அது
இவை அவை
இதனால் அதனால்
நான் தான்
நாம், நாங்கள் தாம், தாங்கள்
நீ அவன், அவள்
நீங்கள் அவர்கள்

நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது கவனிக்கவேண்டியவை

எ.கா.
நேர்க்கூற்று அயற்கூற்று
“நான் நேற்றே தேர்வுக்குப் படித்துவிட்டேன்“ என்று கமலி தன் தோழியிடம் கூறினாள். கமலி தன் தோழியிடம், தான் முதல்நாளே தேர்வுக்குப் படித்துவிட்டதாகக் கூறினாள்.
“கடைக்காரரே, தக்காளி என்ன விலை?“ என்று கந்தன் கேட்டான். கந்தன் கடைக்காரரிடம் தக்காளியின் விலையைக் கூறுமாறு கேட்டான்.
அம்மா, “இனியா, மழை பெய்கிறது. குடை எடுத்துக்கொண்டு போ“ என்றாள். அம்மா இனியாவிடம் மழை பெய்வதாகவும் குடை எடுத்துக்கொண்டு போகுமாறும் கூறினாள்.
“உன் பெயர் என்ன?“ என்று ஆசிரியர், மாணவனிடம் கேட்டார். ஆசிரியர் மாணவனை நோக்கி அவனது பெயரைக் கூறுமாறு கேட்டார்.
குழலி தன் அம்மாவிடம், “ஆஹா! எவ்வளவு அழகான தோட்டம்“ என்று வியந்தாள். குழலி தன் அம்மாவிடம் தோட்டம் மிக அழகாக உள்ளதாகக் கூறினாள்.