ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 30
30.5 கேட்டல் கருத்தறிதல்

உதவி வரைத்தன்று உதவி

வாட்டிகன் நகரில் ஓர் உணவகம் இருந்தது. அந்த உணவகத்தில் உணவு உண்ண பெண் ஒருவர் வந்தார். அப்போது, ’பவுல்’ என்பவர் உணவகத்தில் உணவு கேட்டு நின்றார். அவ்வுணவக உரிமையாளர் அவருக்கு உணவளிக்க மறுத்தார். உணவு உண்ண வந்த பெண், அந்த மனிதருக்கும் சேர்த்து உணவளிக்கக் கூறினார். தாம் அதற்கான தொகையையும் அளிப்பதாகவும் கூறினார். இருப்பினும், பவுலுக்கு உணவளிக்க உணவக உரிமையாளர் மறுத்துவிட்டார். இதற்கான காரணத்தைக் கேட்டார் அந்தப் பெண். “இந்த பவுல் என்பவர், சில ஆண்டுக்கு முன்பு என் உணவகத்தில் பணிபுரிந்தார். அப்போது பசியோடு வந்த ஒரு பெண்ணிடம் பணம் பெற்றுக்கொள்ளாமல் உணவளித்தார். அதனால் அவரைப் பணியிலிருந்து நீக்கினேன்” என்றார் உரிமையாளர்.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? அன்று உணவு பெற்றுக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற அந்தப் பெண் நான்தான். பவுல் எனக்குத்தான் உணவு அளித்தார். அவரைப் போன்றவர்கள் உதவியதால்தான், நான் இன்று உயிரோடு இருக்கிறேன். உங்கள் உணவகத்திற்கு அதிக அளவில் உணவுப்பொருள்களை வழங்கும் நிறுவனம் டி.எம்.கேபிடல் (DM Capital). இதன் உரிமையாளர் நான்தான். என்பெயர் கத்ரீன் லில்லி. இன்றிலிருந்து எமது நிறுவனம் உணவுப்பொருள்களை விற்பனை செய்வதற்காக மட்டுமன்றி, மக்கள் நலனுக்காகவும் இயங்கும் எனக் கூறினார் கத்ரீன் லில்லி.

வினாக்கள்

உணவகம் வாட்டிகன் நகரில் அமைந்திருந்தது.

உணவகத்தில் உணவு உண்ண வந்த பெண், உணவு கேட்டு நின்றவருக்கும் சேர்த்து உணவளிக்குமாறும் அதற்கான தொகையையும் தாம் அளிப்பதாகவும் கூறினார்.

பவுல் சில ஆண்டுக்கு முன்பு என் உணவகத்தில் பணிபுரிந்தார். அப்போது பசியோடு வந்த ஒரு பெண்ணிடம் பணம் பெற்றுக் கொள்ளாமல் உணவளித்தார். அதனால் அவருக்கு உணவக உரிமையாளர் உணவளிக்க மறுத்தார்.

கத்ரீன் லில்லி, அன்று உணவு பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற அந்தப் பெண் நான் தான். பவுல் எனக்குத் தான் உணவு அளித்தார். அவரைப் போன்றவர்கள் உதவியதால் தான், நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றார்.

கத்ரீன் லில்லியின் டி.எம்.கேபிடல் நிறுவனம் உணவுப் பொருள்களை விற்பனை செய்வதோடு, மக்கள் நலனுக்காகவும் இயங்குகிறது.

தகவல் துளி

சாரணியம் என்பது, நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய சிறுவர்களுக்கு நல்ல பண்புகளை வளர்த்து, நல்லொழுக்கம் கொண்டு நாட்டின் நற்குடிமக்களாகத் திகழ்வதற்கு வழங்கப்படும் ஒரு பயிற்சியாகும். இதனைச் சாரணப் பயிற்சி என்றும் கூறுவர். இப்பயிற்சித் திட்டத்தை உருவாக்கி, உலகினுக்கு ஓர் அன்பளிப்பாகத் தந்தவர் இராபர்ட் பேடன் பவல். இவர் 1907ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சாரணர் பயிற்சியைத் தொடங்கினார். இன்று உலகம் எங்கும் பரவிய இப்பயிற்சிமுறை சாரண இயக்கம் என்னும் பெயரில் ஓர் உலகப் பேரியக்கமாகத் திகழ்கிறது.


இராபர்ட் பேடன் பவல்
1857 - 1941