சிகரம்
(முதல் பருவம்)
இக்காலக் கவிஞர்களின் பாடுபொருள்கள் நாடு, இனம், மொழி எனத் தொடங்கி அன்றாட வாழ்க்கைவரை நீள்கின்றன. நாமக்கல் கவிஞரும் மேற்கண்ட பாடுபொருள்களில் பல கவிதைகள் இயற்றியுள்ளார். இவர் காந்தியக் கொள்கைகள் மீது கொண்ட பற்றால், நாட்டின் சிறப்பை உணர்த்தும் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்; இதனால் காந்தியக் கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
| நிலவளம் நீர்வளம் நிறைந்ததுன் நாடு; | ||
| நீண்டஉன் பரப்பிலும் வேறிலை ஈடு; | ||
| விலையிலும் விளைவிலும் மலிந்ததுன் தேசம்; | ||
| வேண்டிய யாவும்உன் எல்லையில் வாசம். |
| முப்பதும் பத்துமாம் கோடிஉன் மக்கள்; | ||
| மூவுல கத்தையும் ஆண்டிடத் தக்கார்; | ||
| அற்புத மாகிய ஆற்றல்கள் நிறைந்தாய் | ||
| அறியாத் தனத்தால் அடிமையில் இருந்தோம். |
| படையெடுத் தவரும் பசியெடுத் தவரும் | ||
| பற்பல நாட்டார் உனையடுத் தவரை | ||
| அடைவுடன் அத்தனை பெயரையும் தாங்கி | ||
| ஆதரித் தாண்டஉன் அருங்குணம் ஓங்க |
| ஞானமுங் கலைகளுக் கிருப்பிட மாவாய் | ||
| நாகரிகத்தின் பிறப்பிட மாவாய் | ||
| தானமும் தவங்களைத் தாங்கின துன்கை | ||
| தருமம் யாவையும் தழைத்தது மிங்கே. |
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
என் தாய் நாடே! நீ நிலவளமும் நீர்வளமும் நிரம்பப் பெற்றிருக்கிறாய்; உன்னைப் போல் நீண்ட நிலப்பரப்பு மிக்க நாடு வேறில்லை; மக்களுக்குரிய மதிப்பும், உற்பத்திப் பொருள்களும் உன்னிடம் மிகுதியாய்க் கிடைக்கின்றன.
சிறப்புமிக்க நீ நாற்பது கோடி குடிமக்களைப் பெற்றிருக்கிறாய்; அக்குடிமக்கள் யாவரும் மூவுலகையும் ஆளும் ஆற்றல் பெற்றவர்கள்; இதுபோன்ற பல அற்புத வளங்களைப் பெற்றிருந்தும், உன் மக்களாகிய நாங்கள் சில காலம் அடிமையாய் இருந்ததற்குக் காரணம் எங்கள் அறியாமையே.
வளங்களைச் சுரண்ட வந்தவர்களையும் வறுமையென வந்தவர்களையும் பிற நாட்டினர் என எண்ணாது வாரியணைத்து, தம் மக்கள்போல் காத்த உன் உயர்குணம் வாழ்க!
அறிவும், கலைகளும் நிலைத்துத் தங்கியிருக்கும் இருப்பிடமாவாய்; உலகமனைத்தும் தோன்றிச் சிறந்த நாகரிகம் அனைத்திற்கும் பிறப்பிடம் ஆவாய்; தானம், தவம் இரண்டும் தவறாது நடைபெறச் செய்த உன் கைகளால் அறச்செயல் அனைத்தையும் நடைபெறச் செய்தாய்.
இப்பாடல் ’நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ என்னும் கவிதைத்தொகுப்பில் ’இசைமலர்’ என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை எழுதியவர் வெ.இராமலிங்கனார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்ததனால் ’நாமக்கல் கவிஞர்’ என்று அழைக்கப்படுகிறார். ’என் கதை’ (சுயசரிதம்), ’அவளும் அவனும்’, ’மலைக்கள்ளன்’, ’தமிழன் இதயம்’, ’சங்கொலி’, ’காந்தி அஞ்சலி’ போன்ற நூல்களை இயற்றியுள்ளார். தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்ற பெருமைக்குரியவர். இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் (தாமரைச் செவ்வணி) விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
| 1. | தேசம் | - | நாடு | ||
| 2. | வாசம் | - | வசித்தல் | ||
| 3. | தக்கார் | - | தகுதியுடையோர் | ||
| 4. | மூவுலகம் | - | விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் | ||
| 5. | அருங்குணம் | - | சிறந்த குணம் | ||
| 6. | ஓங்குக | - | வாழ்க | ||
| 7. | தானம் | - | ஈதல் | ||
| 8. | தவம் | - | வருந்தித் துறத்தல் | ||
| 9. | தருமம் | - | அறம் |