சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.3 படிப்போம்

பிரேசில்

அன்புக் குழந்தைகளே! வணக்கம். யாரோ பேசுவதுபோல் இருக்கிறதா? நீங்கள் சுழற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் உலக உருண்டையிலுள்ள பிரேசில்தான் பேசுகிறேன்.

நான் தென் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கிடையே காணப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாவேன். நிலப்பரப்பின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாவேன். என் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய காடுகளான அமேசான் உள்ளிட்ட அடர்ந்த காடுகளால் பரவலாக அறியப்படுகிறேன். அக்காடுகளின் வழி வருகின்ற அமேசான் ஆறு ஒரு தனி ஆறன்று. பல நூற்றுக்கணக்கான நீர்வழிகளின் சங்கமம் ஆகும். என் நிலப்பரப்பு மிகவும் மாறுபட்டது.

என் மக்கள் மூன்று இனக்குழுக்களில் இருந்து வந்தவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் அமெரிண்டியர்கள், ஐரோப்பியக் குடியேறிகள் (போர்ச்சுக்கீசியத்திலிருந்து வந்தவர்கள்), ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர். என் நாடு முழுக்கப் பேசப்படுகின்ற தேசிய மொழியாகப் போர்ச்சுக்கீசியம் திகழ்கிறது. இப்படிப் பல இனக்குழு மக்கள் கூடி வாழ்வதால் பண்பாடு, இசை, உணவுமுறை ஆகியன பன்முகத் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.


பிரேசில்

எம் மக்களில் பலரும் கால்பந்து விளையாட்டின் மீது தீராக்காதல் கொண்டுள்ளனர். பீலே, நெய்மர் போன்ற சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளனர், கால்பந்துப் போட்டியில் ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம்.

என் வனப்பகுதிகளில் பல விதமான விலங்கினங்களும், ஆறுகளில் பல அரியவகை மீனினங்களும் காணப்படுகின்றன. நான் பலவிதமான மண்வகைகளைக் கொண்டிருக்கிறேன். கரும்பு, மரப்பால், சோயா பீன்ஸ், கோகோ பீன்ஸ், காஃபி, பருத்தி, அரிசி, வெப்ப மண்டலப் பழங்கள் ஆகியவற்றை விளைவித்து அதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெறுகின்றேன்.

வேதிப்பொருள்கள், உரங்கள், இரும்புச்சாதனங்கள், விமானம் மற்றும் கார் உற்பத்தியில் தன்னிகரற்று விளங்குகின்றேன். ஆகவே நான் தென் அமெரிக்காவின் தொழில் உற்பத்தி மையமாகத் திகழ்கின்றேன்.

எனது அரசு கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரேசிலியாவைத் தலைநகராகக் கொண்டு குடியரசுத் தலைவரின் தலைமையில் அரசு நடத்தப்படுகிறது.

இசையும் கவிதையும் பாடலும் என் நாட்டு மக்களின் வாழ்வோடு கலந்திருப்பவை. அவை என் மக்களின் மன உணர்வின் அடிப்படையில் அமைகின்றன. அவை மட்டுமன்றி மண்பாண்டக் கலைகளிலும், ஓவியக் கலைகளிலும் என் மக்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.

இவ்வாறாக மக்கள் வாழ்வதற்கான அனைத்துக் கட்டமைப்புகளும் கொண்ட நாடாக நான் இருக்கின்றேன். சில இடர்களைக் களைந்தும், கடந்தும் உலகம் போற்றும் நாடாகத் தலைசிறந்து நிற்கின்றேன். ஆகவே மாணவர்களே நீங்களும் உங்கள் தாய்த்திரு நாட்டைச் சிறப்புறச் செய்யுங்கள்..!

அடுத்த முறை சந்திப்போம்! அதுவரை நாடு முன்னேறச் சிந்திப்போம்!

பொருள் அறிவோம்

1. இடர்கள் - துன்பம்
2. இனக்குழு - ஓர் இனத்தினர் குழுவாகச் சேர்ந்து வாழ்தல்
3. சங்கமம் - இணைப்பு