சிகரம்
(முதல் பருவம்)
இலக்கிய வகையால் சொற்களை நான்காகப் பிரிக்கலாம். அவை,
1. இயற்சொல் 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வடசொல்
கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையிலுள்ள சொல் இயற்சொல் எனப்படும். இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,
1. பெயர் இயற்சொல் (எ.கா) மண்
2. வினை இயற்சொல் (எ.கா) ஓடினான்
| வ.எண் | பெயர் இயற்சொல் | வினை இயற்சொல் |
| 1. | கல் | படித்தாள் |
| 2. | கடல் | தாவியது |
| 3. | மரம் | நடந்தான் |
கற்றவர் மட்டும் பொருள் உணர்ந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள சொல் திரிசொல் எனப்படும்.
எ.கா : பீலி, வினவினான்
இதில் ’பீலி’ என்பது மயில்தோகை, ‘வினவினான்’ என்பது கேட்டான் என்று பொருள்படும். இதனைக் கற்றவர் மட்டுமே புரிந்துகொள்வர். அதனால் இச்சொற்கள் திரிசொற்கள் ஆகும்.
திரிசொல்லை இரண்டு வகைப்படுத்தலாம். அவை, 1.பெயர்த் திரிசொல் 2. வினைத் திரிசொல்
தத்தை, கிள்ளை, அஞ்சுகம் ஆகியவை கிளி என்னும் ஒரே பொருளை உணர்த்தும் பல பெயர்த் திரிசொற்களாகும்.
ஆழி என்பது கடல், மோதிரம், சக்கரம், வட்டம் போன்ற பல பொருளை உணர்த்தும் ஒரு பெயர்த் திரிசொல் ஆகும்.
செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான் ஆகியவை சொன்னான் என்னும் ஒரே பொருளை உணர்த்தும் பல வினைத் திரிசொற்களாகும்.
வீசு என்பது எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு போன்ற பல பொருளை உணர்த்தும் ஒரு வினைத் திரிசொல் ஆகும்
பிற மொழிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
எ.கா : வாடகை, அசல், தயார்
இவற்றுள் வாடகை என்பது தெலுங்குமொழிச் சொல். அசல் என்பது உருதுமொழிச் சொல். தயார் என்பது பாரசீக மொழிச் சொல். இவை போன்று பல்வேறு சொற்கள் தமிழில் கலந்து தமிழ்ச் சொற்கள் போலவே பேசப்பட்டு வருகின்றன.
|
அல்வா - அரபி ஆசாமி - உருது கம்மி - பெர்சியன் சேமியா - பஞ்சாபி கொலுசு - தெலுங்கு |
கோப்பை - போர்த்துக்கீசியம் சட்னி - ஹிந்தி பப்பாளி - மலாய் சாம்பார் - மராத்தி |
வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
எ.கா : கமலம், புஷ்பம்
வடசொல் இரண்டு வகைப்படும். அவை
1. தற்சமம்
2. தற்பவம்
வடமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும்.
எ.கா : காரணம், குங்குமம், நியாயம்
வடமொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப மாறிவருவது தற்பவம் எனப்படும்.
எ.கா :
ஹரி - அரி
வருஷம் - வருடம்
சரஸ்வதி - சரசுவதி