சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.2 படிப்போம்

தனிப்பாடல்

சமூக வாழ்வில் இளமைக் காலம்முதல் முதுமைக் காலம்வரை பல உறவுகளோடு சேர்ந்து வாழ்கிறோம். அவ்வாறு சேர்ந்து வாழும்போது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கிடைக்கும் அனுபவங்கள் பல. இவ்வனுபவங்கள்தான் உறவுகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத்தருகின்றன. தனிப்பாடல் ஒன்றில், உறவுகளைப் பற்றியும் அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமைகோடி பெறும்;

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்;

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும்;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமைகோடி பெறும்.

- ஔவையார்

பாடல் விளக்கம்

தம்மை மதியாதார் வீட்டிற்குச் செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்குச் சமமாகும்.

‘உண்ணுங்கள்! உண்ணுங்கள்!’ என்று அழைக்காதவர்களின் வீட்டில் உணவு உண்ணாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்குச் சமமாகும்.

கோடி செல்வத்தைக் கொடுத்தாவது பண்பட்ட நற்குடியில் பிறந்தவரோடு சேர்ந்து இருப்பது கோடி செல்வம் பெற்றதற்குச் சமமாகும்.

கோடி செல்வம் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்குச் சமமாகும்.

நூலைப் பற்றி

சங்க காலத்தில் தொகுக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு சங்க இலக்கியம். பிற்காலத்தில் தொகுக்கப்படாமல் இருந்த பல பாடல்களைத் தொகுத்து அவற்றைத் ’தனிப்பாடல் திரட்டு’ என்று அழைத்தனர். கம்பர், காளமேகப் புலவர், ஔவையார், இராமச்சந்திரக் கவிராயர் முதலான பல்வேறு புலவர்களால் வெவ்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் இவை.

பொருள் அறிவோம்

1. முற்றம் - வாசல்
2. நாக்கோடாமை - வாக்கு தவறாமை
3. மனை - வீடு