சிகரம்
(முதல் பருவம்)
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவத்தைப் பெறுகின்றனர். ஒரு செயலைச் செய்யும்போது தமக்குக் கிடைக்கும் அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுதல் நம் சமூகத்தின் இயல்பு. நம் முன்னோரின் வாழ்க்கை அனுபவமே பழமொழியாக வெளிப்படுகிறது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே பழமொழியின் முதன்மை நோக்கம்.
ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்பப் பழமொழிகள் சொல்லப்படுகின்றன. பழமொழிகள் கேட்போருக்குப் பயன்தரக்கூடியவை. கவனத்துடன் செயல்பட வழிகாட்டுபவை.
முகிலனும் கபிலனும் பேசிக்கொள்கின்றனர்.
| கபிலன் | : | முகிலா! எங்கே செல்கிறாய்? | ||
| முகிலன் | : | நேற்றுப் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை இன்னும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. நூலகத்திற்குச் செல்கிறேன். | ||
| கபிலன் | : | அது என்ன புத்தகம்? | ||
| முகிலன் | : | பழமொழிகள் பற்றிய புத்தகம். அதனைப் படிக்க மிகவும் வியப்பாக இருக்கிறது. | ||
| கபிலன் | : | உன்னிடம் பழமொழிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன். | ||
| முகிலன் | : | நம் முன்னோர்களின் அனுபவங்களின்வழி பிறந்தவை பழமொழிகள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் சரியான பாதையில் செல்லவும் இப்பழமொழிகள் துணைபுரிகின்றன. பழமொழிகள் கருத்தாழம் மிக்கவை. இவை நேரடியாகப் பொருள் தருவதில்லை. படிக்கப் படிக்க சிந்தனையைத் தூண்டிடும் கருத்துக் கோவையாகப் பழமொழிகள் திகழ்கின்றன. | ||
| கபிலன் | : | அறிவுரை கூறும் வகையில் அமைந்த பழமொழிகள் உள்ளனவா? | ||
| முகிலன் | : | ஆம், இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ’கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்னும் பழமொழி ஒருவரால் உலகில் உள்ள அனைத்துத் துறை சார்ந்த செய்திகளையும் கற்றுக்கொள்வது மிக எளிதன்று; தாம் கற்றுக்கொண்டது உலகில் உள்ளவற்றுள் தம் கைம்மண்ணளவு மட்டுமே. அதாவது மிகவும் குறைவு. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. எனவே கல்லாதது உலகளவு என அறிவுறுத்துகிறது. கபிலன் : அருமை, சிறந்த பொருள் உணர்த்தும் பழமொழி. | ![]() |
|
| கபிலன் | : | அருமை, சிறந்த பொருள் உணர்த்தும் பழமொழி. | ||
| முகிலன் | : | கபிலா, ’குறை குடம் கூத்தாடும்’ என்றொரு பழமொழி உள்ளது. இப்பழமொழிக்கான பொருள் என்னவென்றால், குடம் நிறையத் தண்ணீர் இருந்தால் தண்ணீர் சிந்தாமல் எடுத்துச்செல்லலாம். குடத்திலுள்ள நீர் குறைவாக இருந்தால் எடுத்துச்செல்லும்போது தளும்பும். அதுபோல முழுமையான அறிவுடையவர்கள் அமைதியாக இருப்பர். அரைகுறை அறிவுடையவர்கள் தனக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக்கொண்டு பேசுவர். | ![]() |
|
| கபிலன் | : | அடக்கத்துடன் இருப்பது நிறை குடத்திற்கு ஒப்பானது என்னும் பழமொழி மிகச் சிறப்பு. முகிலா இன்னும் சில பழமொழிகளைச் சொல். | ||
| முகிலன் | : | ’காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழியைப் படிக்கிறபோது அதில் பொதிந்துள்ள உட்கருத்தை அறிய முடிகிறது கபிலா. அறுவடை செய்த நெல் போன்ற தானியங்களைக் காற்று அடிக்கிறபோது, தூற்றினால்தான் தானியத்தோடு கலந்துள்ள தூசுகள் நீங்கும். அதுபோல வாய்ப்பு கிடைக்கும்போது செயலை உடனே செய்திடல் வேண்டும். வாய்ப்பைத் தவறவிட்டால் மீண்டும் கிடைக்காது. காற்று வீசுகிறபோதே முறத்தில் தானியங்களை அள்ளி, அவற்றிலுள்ள தூசுகளை நீக்கிவிட வேண்டும் என்பது நேரடிப் பொருள். இந்தப் பழமொழி, நமக்கு வாய்ப்பு வருகிறபோது அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறவிட்டால் மறுபடியும் வாய்ப்பு கிடைக்காது என்னும் கருத்தாழம் மிக்க மறைமுகப் பொருளைத் தருகிறது. | ![]() |
|
| கபிலன் | : | மிகவும் அருமை. பழமொழிகள் உண்மையிலேயே நம்மைப் பண்படுத்தக்கூடியவைதான். நானும் பழமொழிகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். இப்போது என் பாட்டி சொன்ன பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. ’கடைசித் துளியில் பானை நிரம்பும்’. முகிலா, இந்தப் பழமொழிக்கு என்னபொருள்? | ![]() |
|
| முகிலன் | : | இந்தப் பழமொழி ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் பயன்படக்கூடியது கபிலா. வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் முயற்சி செய்வதை நிறுத்திவிடக் கூடாது; நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. கடைசித் துளியில் பானை நிரம்பும் என்றால் ஒவ்வொரு துளியும் மிகவும் முக்கியமானதுதான். சிறு துளியாக இருந்தாலும் அலட்சியம் இல்லாமல் கவனமாகச் சேர்க்க வேண்டும் என்பதை இப்பழமொழி நமக்கு உணர்த்திவிடுகிறது. பழமொழிகள் நம் பண்பாட்டின் அடையாளமாய்த் திகழ்பவை. அவற்றைப் படித்து நாம் பயன்பெறுவோம். பலருக்கும் எடுத்துக்கூறுவோம். |
| 1. | கல்லாதது | - | தெரிந்துகொள்ளாதது | ||
| 2. | பொதிந்துள்ள | - | மறைந்துள்ள | ||
| 3. | முறம் | - | நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம் | ||
| 4. | தூற்றுதல் | - | காற்று வீசும் திசையில் முறத்தில் உள்ள தானியத்தை மேலிருந்து கீழாக மெதுவாகக் கொட்டுதல் | ||
| 5. | அலட்சியம் | - | பொருட்படுத்தாத போக்கு |