சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.2 படிப்போம்

பூக்கும் மரங்களின் ரகசியம்

இயல்பாகத் தோன்றி மறையும் அனைத்தும் இயற்கையே. இதனைச் சார்ந்தே அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கைப் பொருள்களைப் பாடுபொருளாகக் கொண்டு புதுக்கவிதைகள் பல படைக்கப்படுகின்றன. ’பூக்கும் மரங்களின் ரகசியம்’ என்னும் தலைப்பில் மரங்களின் ரகசியத்தைப் பறைசாற்றுகிறார் கவிஞர் தேவதேவன்

நீரை நாடும் தேடலே வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே அடிமரம்
ஒளியை நாடும் விழைவே கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே தளிர்கள்
அறிந்தேன் பூக்கும் மரங்களின் ரகசியம்.

- தேவதேவன்

பாடலின் பொருள்

மரங்கள் பூப்பதன் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு விடைதான் இந்தக் கவிதை. இந்தக் கேள்விக்கு வேறு பல பரிமாணங்களைச் சேர்த்துவிடுகிறார் கவிஞர். நீரை விரும்பித் தேடுவதன் வெளிப்பாடுதான் வேர்கள் என்கிறார். எவ்விதச் சூழல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்காக மௌனமாகக் காத்திருப்பதுதான் அடிமரம் என்றும், ஒளியை அடைய வேண்டும் என்ற உணர்வுதான் கிளைகள் என்றும் சொல்கிறார். மரத்திலிருந்து இலைகள் உதிர்வதை மரணத்தோடு ஒப்பிடுகிறார். ஒரு இலை உதிர்வதைப் போலத்தான் மனித வாழ்க்கையின் மரணமும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறார். அடுத்த வரியில் மரத்தின் பசுமையான தளிர்களைப் பிறப்போடு ஒப்பிடுகிறார். இதுதான் பூக்கும் மரங்களின் ரகசியம் என்கிறார். மரத்தின் ரகசியத்தைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதையானது மனித வாழ்க்கையின் ரகசியத்தையும் எடுத்துவைக்கிறது

நூலாசிரியர் பற்றி

மரங்கள் பூப்பதன் ரகசியம் என்னும் இக்கவிதை ’புல்வெளியில் ஒரு கல்’ என்னும் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் ஆசிரியர் தேவதேவன். இவருடைய இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ஒரு நவீனத் தமிழ்க் கவிஞர். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

பொருள் அறிவோம்

1. உதிர்தல் - கீழே விழுதல்
2. தளிர் - முளைக்கும் பருவத்தில் உள்ள இலை
3. ஒப்பிடுதல் - ஒத்துப்பார்த்தல்