சிகரம்
(முதல் பருவம்)
இயற்கையின் கொடையான நிலம், நீர், காற்று ஆகியவை இந்த உலகம் இயங்குவதற்கான அடிப்படை ஆதாரங்களாகும். இந்த இயற்கை ஆதாரங்கள் இல்லையென்றால் புவியின் இயக்கமே இல்லை எனலாம். இயற்கையின் ஒவ்வோர் அங்கமும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும், புதிய சூழலுக்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஆனால், இயற்கையுடன் மனிதர்கள் நடத்தும் அதீத இடையீடு காரணமாக இயற்கையானது சமநிலை தவறுகிறது. விளைவாக, புவி வெப்பமாதல் அதிகரித்துவருகிறது.
இன்று உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள சவாலான பிரச்சனை புவி வெப்பமாதல் ஆகும். காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகளும் வாகனங்களும் உருவாக்கும் காற்று மாசு, கட்டுப்பாடற்ற பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவியின் வெப்பம் இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாகிவருவதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி, புவி வெப்பமயமாவது அளவுக்கு அதிகமாக உயரும்போது அது அபாயகரமான தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
பனிப்பாறை என்பது சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும். இது இயற்கைச் சமநிலையிலிருந்து தவறும்போது ஆறுகளின் ஓட்ட விகிதம், கடல் மட்டம், மழைச் சுழற்சி போன்றவையும் சமநிலை தவறுகின்றன.
புவி வெப்பமடைதல் காரணமாக வெள்ளம், வெப்ப அலைகள், வறட்சி, சூறாவளி முதலியவை முன்பைவிட இப்போது மிகவும் அதிக அளவிலும் தீவிரமாகவும் வெளிப்பட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
பவளப்பாறைகள், வெப்பமண்டல மழைக்காடுகள், ஆல்பைன் புல்வெளிகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளில் புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் பல உயிரினங்கள் தங்கள் வாழ்விடத்தை இழக்க நேர்கிறது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக எற்படும் காட்டுத்தீயினால் மக்களும் விலங்குகளும் காடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. கடல் மட்டம் அதிகரிப்பதால் பல கடலோரப் பகுதிகளிலுள்ள வாழ்விடங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதன் பொருட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிடுகிறது.
பருவ மாற்றத்தைப் பொறுத்து நோய்க்கிருமிகளின் தாக்கம் இருக்கும். இப்போது இந்த இயற்கைச் சீர்குலைவு காரணமாகப் புதிய வகையான கொடிய பூச்சிகளும் வைரஸ் பாக்டீரியாக்களும் தோன்றி உயிரினங்களை அச்சுறுத்துகின்றன.
இத்தகைய பாதிப்புகளிலிருந்து நாம் மீள்வது எளிதான காரியமல்ல. அதனால்தான், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை இன்று அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளன. இதற்குத் தீர்வுகாணும் பொருட்டு உலக அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
”தன்னுடைய கல்லை ஒருவர் எடுத்துவைக்கும்போது இந்த உலகத்தைக் கட்டமைப்பதில் தன்னுடைய பங்கையும் அளிக்கிறோம் என்ற உணர்வுதான் மானிடம்” என்கிறார் பிரெஞ்சு நாவலாசிரியர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery). இன்று இயற்கைச் சமநிலையைப் பேணுவதற்கான முயற்சியிலும் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது. அதற்காக நாம் செய்ய வேண்டியவற்றுள் சில பின்வருமாறு:
மரம் வளர்த்தல்.ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ஆம் நாள் உலக இயற்கைப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையை நேசிப்பது மட்டுமின்றி அதைப் பாதுகாப்பதும் நம் கடமையாகும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையினருக்கு இப்பூமியை மாசின்றிக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை நாம் உணரவேண்டும்.