சிகரம்
(முதல் பருவம்)
ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது, சொல் எனப்படும். கிளவி, பதம், மொழி என்பன சொல்லின் வேறுபெயர்கள்.
எ.கா. பூ, கனி, கல்வி, பட்டம்.
எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொற்கள் ஆகா. எடுத்துக்காட்டாக, வில்க
இதில் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன. ஆயினும், பொருள் தரவில்லை. எனவே, இதனைச் சொல் என்று சொல்வதில்லை.
| ஓர் எழுத்துச் சொற்கள் | = | பூ, வா, ஆ, கை, பை, ஈ, தை. | |||
| ஈரெழுத்துச் சொற்கள் | = | நட, நில், படி, கண், இழு. | |||
| மூவெழுத்துச் சொற்கள் | = | பலம், புறம், கடல், தன்மை, மாண்பு. | |||
| நான்கெழுத்துச் சொற்கள் | = | கடவுள், சிறுத்தை, வேந்தன், அரும்பு, தங்கம். |
நான்கெழுத்துகளுக்கு மேற்பட்ட சொற்களும் தமிழில் உண்டு.
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடிந்தால் அது பகுபதம் ஆகும். பகுபதங்களைப் பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாகப் பகுக்கலாம். வினைப்பகுபதம், தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.
எடுத்துக்காட்டு. அறிஞன், செய்தாள்.
ஒரு பகுபதச்சொல் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் ஆகும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு வகைப்படும்.
பகுக்க முடியாத - பகுத்தாலும் பொருள் தராத இயல்புடைய சொல் பகாப்பதம் ஆகும். எடுத்துக்காட்டு; மண், கண், நிலம், காற்று, நாய், வா.
பகாப்பதம் பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாபதம், இடைப்பகாப்பதம், உரிப்பகாப்பதம் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொற்களாக அமையும் பகாப்பதங்கள் பெயர்ப்பகாப்பதம் எனப்படும்.
எ.கா : நெருப்பு, காற்று, நிலம், நீர்.
வினைச்சொற்களாக அமையும் பகாப்பதங்கள் வினைப்பகாப்பதம் எனப்படும்.
எ.கா : உண், தின், நட, வா.
இடைச்சொற்களாக அமையும் பகாப்பதங்கள் இடைப்பகாப்பதம் எனப்படும்.
எ.கா : மன், கொல், போல், மற்று.
உரிச்சொற்களாக அமையும் பகாப்பதங்கள் உரிப்பகாப்பதம் எனப்படும்
எ.கா : சால, கூர், மிகு, உறு, தவ, நனி, கழி