சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.2 படிப்போம்

சீவக சிந்தாமணி

கல்வி என்பது ஒழுக்கம், அறிவு போன்றவற்றைத் தரும் சமூகச் செயல்பாடு. கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற சிறப்பு பெற்றவர்களாக இருப்பார்கள். கல்வியின் நோக்கம், ஒருவரைச் செல்வந்தராக மாற்றுவது அன்று. சக உயிரினங்களை மதிக்கும் பண்பாளராக இருக்கச் செய்தலே ஆகும்.

கற்றறிந்தோர் சிறப்பு

”சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”

- திருத்தக்கத்தேவர்

பாடல் விளக்கம்

கருக்கொண்ட பச்சைப்பாம்புபோல நெற்பயிர்கள் தோற்றம் கொண்டுள்ளன. நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது, செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலைநிமிர்ந்து நிற்பதுபோல் உள்ளது. அப்பயிர்கள் முற்றியவுடன் நெற்கதிர்கள் சாய்ந்திருப்பது, தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.

நூலைப் பற்றி

சீவக சிந்தாமணி, தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. சீவகனைத் தலைவனாகக் கொண்டு படைக்கப்பட்டது இக்காப்பியம். இது மணநூல் எனவும் அழைக்கப்படுகிறது. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே இக்காப்பியத்தின் மையக்கருத்தாகும். இக்காப்பியமே தமிழில் விருத்தப்பாவில் அமைந்த முதற்காப்பியம் ஆகும். 13 இலம்பங்களைக் கொண்டது. சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத்தேவர். இவர் ‘நரிவிருந்தம்’ என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

தெரிந்துகொள்வோம்

ஐம்பெருங்காப்பியங்கள்

வ. எண்.

அணிகலன்

நூல் பெயர்

ஆசிரியர் பெயர்

1.

சிலம்பு (காலில் அணிவது)

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்

2.

மேகலை (இடையில் அணிவது)

மணிமேகலை

சீத்தலைச் சாத்தனார்

3.

சிந்தாமணி (கழுத்தில் அணிவது)

சீவக சிந்தாமணி

திருத்தக்கத்தேவர்

4.

வளையல் (கையில் அணிவது)

வளையாபதி

ஆசிரியர் அறியப்படவில்லை

5.

குண்டலம் (காதில் அணிவது)

குண்டலகேசி

நாதகுத்தனார்

பொருள் அறிவோம்

1. சொல் - நெல்
2. சூல் - கரு
3. மாந்தர் - மக்கள்
4. தேர்ந்த நூல் - நல்ல நூல்
5. இறைஞ்சி - வளைந்து