சிகரம்
(முதல் பருவம்)
சமூக மாற்றத்திற்கான காரணிகளுள் முதன்மையானது கல்வி. ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றும் ஆற்றலுடையதும் கல்வியே. கல்வி செழித்தால் சமூகம் செழிக்கும்.
| தாமரைப் பூவில் மதுவதிகம் | ||
| தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம் | ||
| பாமரர் நெஞ்சில் இருளதிகம் | ||
| படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம். | ||
| கல்வி செழித்தால் கவிதைவரும் | ||
| கற்பன கற்றால் திறமை வரும் | ||
| செல்வம் திரண்டால் செழிப்புவரும் | ||
| திறமை மிகுந்தால் புகழ்வளரும். |
- சுரதா
தாமரைப்பூ தேன் அதிகம் கொண்டது. தமிழ்ச் சொல் சுவை மிகுந்தது. கல்வியறிவற்றவர் உள்ளம் இருள் உடையது; கல்வி அறிவு பெற்றவர் உள்ளம் தெளிவு நிறைந்தது. கல்வி செழிப்பதனால் கவிதை பிறக்கும். கற்பதை நன்கு கற்றால் திறமை வளரும். செல்வம் பெருகினால் வாழ்வு வளம்பெறும். திறமையால் மிகுந்த புகழ் வந்து சேரும்.
இக்கவிதை ‘தேன்மழை‘ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதனை எழுதியவர் சுரதா. இவரது இயற்பெயர் இராசகோபாலன். பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் பாரதிதாசனின் இயற்பெயரான ‘சுப்புரத்தினம்’ என்பதுடன் ‘தாசன்’ என்பதைச் சேர்த்து, முதலெழுத்துகளைக் கூட்டித் தம்பெயரைச் சுரதா என மாற்றிக்கொண்டார். இவர் ‘உவமைக்கவிஞர்‘ என்று சிறப்பிக்கப்படுகிறார். காவியம் என்னும் இதழை நடத்தினார். துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சிக்கனம், அமுதும் தேனும், நெய்தல் நீர் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரது தேன்மழை என்னும் கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது.
| 1. | மது | - | தேன் | ||
| 2. | பாமரர் | - | கல்வியறிவற்றவர் | ||
| 3. | செழிப்பு | - | வளம் |