சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.3 படிப்போம்

வலைப்பூவில் பதிவேற்றம்

தகவல் தொடர்புச் சாதனங்களின் வருகைக்கு முன் பிறருடன் நம்மால் எளிதாகத் தொடர்புகொள்ள இயலவில்லை. இக்காலத்தில் இணைய வசதியின் காரணமாக நொடிப் பொழுதில் பிறருடன் தொடர்புகொண்டு நம் கருத்தைப் பகிரவும் பிறர் கருத்தைப் பெறவும் வலைத்தளங்கள் பயன்படுகின்றன. நமக்கென்று தனி வலைப்பூவை உருவாக்க முடியும். வலைப்பூவில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதைப் பற்றி இப்பாடப் பகுதியில் காண்போம்.

மாறன் : வணக்கம் கோதை. நலமாக உள்ளாயா? நான் உன்னிடம் ஒரு மகிழ்வான செய்தி கூறப்போகிறேன்.
கோதை : என்ன மகிழ்வான செய்தி மாறா?
மாறன் : நான் அடுத்த வாரம் தமிழ்நாடு செல்லவுள்ளேன் கோதை.
கோதை : உண்மையில் மகிழ்வான செய்திதான். எதற்காகச் செல்ல உள்ளாய்? தெரிந்தால் மேலும் மகிழ்வேன் மாறன்.
மாறன் : எனது வலைப்பூவில் நான் ’ஆர். பாலகிருஷ்ணன்’ அவர்களின் ’சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் நூலைப் படித்துவிட்டு அதற்கான பின்னூட்டம் எழுதியிருந்தேன். அதை அவர் படித்துவிட்டு என்னை நேரில் சந்திக்க அழைத்துள்ளார் கோதை.
கோதை : ’வலைப்பூ’ என்றால் என்ன மாறன்?
மாறன் : Blog என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் வலைப்பூ, கோதை.
கோதை : ஓ.. வலைப்பூவில் நாம் எழுதுவதை யார் வேண்டுமானாலும் படிக்கலாமா மாறா? நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?
மாறன் : ஆம். உலகில் எங்கிருப்போரும் வலைப்பூவில் எழுதியுள்ளதை படிக்க முடியும் கோதை. நான் தமிழ் மொழியில் எழுதிவருகிறேன் கோதை.
கோதை : வலைப்பூவின் வரலாறு குறித்து சொல்ல முடியுமா?
மாறன் : ஓ… சொல்கிறேனே. வெப்லாக் (Weblog) என்ற பெயர் முதன்முதலில் 17-12-1997இல் ஜான் பார்கெர் (Jorn Barger) என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. குறுக்க வடிவமான blog என்ற சொல்லைப் பீட்டர் மெர்கோல்ஸ் (Peter Merholz) என்பவரே முதன்முதலில் பயன்படுத்தினார்.
கோதை : வலைப்பூவில் தமிழ் மொழி எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?
மாறன் : வலைப்பூவை, வலைப்பதிவு என்றும் கூறுவர். முதல் தமிழ் வலைப்பதிவாளராய் கார்த்திகேயன் ராமசுவாமி கருதப்படுகிறார். இவரது முதல் தமிழ்ப் பதிவு ஜனவரி 01, 2003இல் இடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
கோதை : நான் வலைப்பூவில் எழுத முடியுமா மாறன்? வலைப்பூப் பக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
மாறன் : ப்ளாக் என்பது இணையதளம் போன்றது. ஆனால் எந்தச் செலவுமில்லாமல் அதனைத் தொடங்கலாம். Blogger, Wix, WordPress, Squarespace, Medium, LinkedIn என்பன இலவச ப்ளாக் ஆரம்பிக்க வசதி தரும் தளங்கள். இவற்றுள் கூகுலின் blogspot தளம் மிகவும் புகழ்பெற்றது. ஓரளவு எழுத்தாற்றல் இருந்தால்கூட, ஒரு கூகுள் கணக்குடன் வலைப்பூ ஆரம்பிக்கலாம்.
மாறன் : முதலில் கூகுளில் ஒரு மின்னஞ்சல் கணக்கைத் தொடங்குக. மின்னஞ்சல் கணக்கைத் தொடங்கியவுடன் வலைப்பூ வசதிக்குச் செல்க. சென்றவுடன் “புதிய வலைப் பதிவை உருவாக்குக“ என்ற பக்கம் வரும். அதில் உனது வலைப்பூவிற்கான பெயரையும் வலைப்பூ முகவரியையும் தட்டச்சு செய்து, “வலைப்பதிவை உருவாக்கு” என்பதைச் சொடுக்கவும்.
கோதை : வலைப்பூவில் எவற்றையெல்லாம் எழுதலாம் மாறன்?
மாறன் : வலைப்பூ நாம் நமக்காகவே உருவாக்கிக்கொள்ளும் தளம். அதில் கட்டற்ற சுதந்திரத்தோடு நமது கருத்துகளை வலிமையாக வைக்கலாம். சமூக அக்கறையோடு கருத்துகளை உலகோடு பகிர்ந்துகொள்ள வலைப்பூ மிகச் சிறந்த படைப்புக்களமாக விளங்குகிறது. புதினம், நாடகம், சிறுகதை, நேர்காணல்கள், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் ஆகியவற்றை நாம் பதிவேற்றலாம்.
கோதை : பயனுள்ள தகவல்களைத் தந்தாய் மாறன். இன்றைக்கே நானும் வலைப்பூக் கணக்கை ஆரம்பித்து எழுதத் தொடங்குகிறேன்.
மாறன் : நன்றி மீண்டும் சந்திப்போம் கோதை.
வலைப்பூ திரட்டிகள்
1. திரட்டி.இன் (http://www.thiratti.in)
2. வலைப்பூக்கள் (http://www.valaipookal.com)
3. தமிழ்மணம் (http://www.tamilmanam.net)
4. திரட்டி.காம் (http://www.thiratti.com)
5. தகவல் இன்போ (http://www.thakaval.info/blogs)
6. தேன்கூடு (http://www.thenkoodu.com)
7.தமிழ்வெளி (http://www.tamilveli.com)
8. சங்கமம் (http://www.tamil.blogkut.com)

உலகம் கிராமம் ஆவதற்குச் சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. சமூக வலைத்தளங்களை நாம் பாதுகாப்பாகப் பயன்படுத்தவேண்டும்.

வலைப்பூ கலைச்சொற்கள்

1.

வலைப்பதிவர்

வலைப்பதிவில் எழுதுபவர்.

2.

வார்ப்புரு

வலைப்பூச் சட்டகம்.

3.

வலைப்பதிவர் சமுதாயம்

திரட்டிகள் மூலம் இணைந்து தம்முள் இடைத்தொடர்புகளைப் பேணும் வலைப்பதிவர்கள்.

4.

பதிவிடல்

உள்ளடக்கத்தினை வலைப்பதிவொன்றில் வெளியிடல்.

5.

பெயரிலி/முகமூடி

தன்னை அடையாளப்படுத்தாது மறுமொழிகள் இடுபவர்.

6.

கூட்டுப்பதிவு/கூட்டு வலைப்பதிவு

ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள்.

7.

இடுகை

வலைப்பதிவில் உள்ளடக்கம் ஒன்றினை இடும் செயல் (வினை) வலைப்பதிவொன்றில் உள்ளிடப்பட்ட உள்ளடக்கம் (பெயர்)