சிகரம்
(முதல் பருவம்)
ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது தனிமொழி எனப்படும்.
(எ.கா) செல், போ, கண், மரம்
இங்கே, எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனிச்சொல் ஒவ்வொன்றும் தனக்கான ஒரே ஒரு பொருளில் மட்டும் வந்துள்ளது.
தொடர்மொழி
தனிமொழிகள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும்.
(எ.கா) அறம் செய், அறநூல் படி, இன்சொல் கூறு, பண்பு காட்டு
இங்கே தனிச்சொற்கள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்துள்ளன.
பொதுமொழி
ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும். அதாவது, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக வரும் சொல்லே பொதுமொழி.
(எ.கா) வேங்கை
வேங்கை என்னும் ஒரு சொல், தனிமொழியாக நின்று புலி என்னும் விலங்கைக் குறிக்கும். வேங்கை என்னும் சொல்லை வேம் + கை என்று பிரித்தால் ’வேகின்ற கை’ என்னும் தொடர்மொழியாக நின்று கையைக் குறிக்கும்.
(”ஒரு மொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி(நன்னூல் : 260)