சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.2 படிப்போம்

பட்டினப்பாலை

சங்க இலக்கியங்களில் பாட்டும் தொகையுமாக பதினெட்டு நூல்கள் உள்ளன. ‘பாட்டு‘ என்பது பத்துப்பாட்டையும், ‘தொகை‘ என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். இவை சங்ககால மக்களின் அக மற்றும் புற வாழ்க்கையை அறியப் பெரிதும் உதவுகின்றன. சங்ககால மக்கள் நடுவுநிலை தவறாது வணிகம் செய்த மாண்பினைப் பட்டினப்பாலைவழி அறிய முடிகிறது.

“......... உழவர்
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்...” (205 - 211)

பாடலின் பொருள்

உழவர்கள் உழவு செய்யும் நீண்ட நுகத்தடியில் தைத்த கொழுமுனை போல, நடுவுநிலை என்னும் குணம் நிலைக்கப்பெற்ற நல்ல நெஞ்சினராய் வணிகர்கள் இருந்தனர். தம் குடிக்குப் பழிச்சொல் வருமென அஞ்சி, பொய்மை தவிர்த்து உண்மை பேசுபவராய் இருந்தனர். தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒன்றாகவே எண்ணினர். தாம் கொடுக்கும் பொருள்களைக் குறைவின்றிக் கொடுப்பர். அதற்கு இணையாகப் பெறும் பொருள்களையும் அதிகமாகப் பெற மாட்டார்கள். பல்வகையான பண்டங்களையும் விலைசொல்லி விற்கும் வணிகத்தைக் காவிரிப்பூம்பட்டினத்து வணிகர்கள் சிறப்பாகச் செய்தனர்.

நூலைப் பற்றி

பட்டினப்பாலை, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 301 பாடல் அடிகளைக் கொண்டது. இந்நூல் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறது. சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைச் சொல்வதாலேயே பட்டினப்பாலை என்னும் பெயர் பெற்றது. காவிரிப்பூம்பட்டினம்தான் இன்று பூம்புகார் என அழைக்கப்படுகிறது. இந்நூலைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றியுள்ளார். இவர் பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

பொருள் அறிவோம்

1. நெடுநுகம் - கலப்பையில் எருதுகளைப் பிணைக்கும் நீண்ட தடி
2. பகல் - நுகத்தாணி
3. வடு அஞ்சி - பழிக்கு அஞ்சி
4. வாய்மொழிந்து - உண்மையைக் கூறி
5. பல் பண்டம் - பல பொருள்கள்
6. வீசும் - விற்கும்