சிகரம்
(முதல் பருவம்)
கிழக்கில் வங்கக்கடலையும் மேற்கில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டது நம் தமிழ்நாடு. கடல் கடந்த வணிகத்தில் தமிழர்கள் ஈடுபட இந்நில அமைப்பே பெரிதும் உதவியிருக்கிறது. சங்க இலக்கியங்கள், அகழாய்வுகளில் கிடைத்த அரிய தகவல்கள், அயல் நாட்டவர் எழுதிச்சென்ற குறிப்புகள் போன்றவை தமிழ்நாட்டினர் கடல் கடந்து வணிகத்தில் சிறப்புற்றிருந்ததைத் தெரிவிக்கும் சான்றுகளாய் உள்ளன.
சீனா மற்றும் தெற்காசிய நாட்டின் வணிகர்கள் இந்தியப் பகுதிகளில் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். அதேபோல் ’யவனர்கள்’ என்றழைக்கப்பட்ட அரேபியர்கள், கிரேக்கர்கள், உரோமானியர்கள், எகிப்தியர்கள் உள்ளிட்டோரும் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வணிகம் செய்துள்ளனர்.
வணிகம் செய்ய அயல்நாடுகளுக்குச் சென்ற நம் தமிழ்நாட்டினர், காலநிலை கருதி அங்கேயே சில காலங்கள் தங்கும் நிலை ஏற்பட்டது. அங்கே தங்கள் வழிபாட்டு இடங்களையும் அமைத்துக்கொண்டனர். அயல்நாட்டு அரசுகளும் அதற்கு உதவிகள் செய்துள்ளன. ஏற்றுமதியில் விலையுயர்ந்த கற்களையும், முத்துகளையும், பட்டாடைகளையும், மஸ்லின் துணிகளையும், ஆபரணங்களையும், வாசனைப் பொருள்களையும் தமிழர்கள் ஏற்றுமதி செய்தனர்.
உரோம் போன்ற நாடுகள் விலை குறைந்த பொருள்களை இறக்குமதி செய்ததால் வெள்ளி தங்க நாணயங்களைக் கொடுத்து ஈடுகட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாயின. அதிக அளவிலான தங்கம் தமிழ்நாட்டிற்கு வருவதைக் கட்டுப்படுத்த உரோம் மன்னர் வெஸ்பாசியன் சட்டங்கள் இயற்றினார். உரோமானிய பயணியான ஸ்திராபோவின் வரலாற்றுக் குறிப்பு, தமிழக அரசுகளுக்கும் உரோமப் பேரரசுக்கும் இருந்த அரசியல் வணிகத் தொடர்பினை விளக்குகிறது. அகஸ்டஸ் மன்னரிடம் பாண்டிய நாட்டினர் தூதராகச் சென்றதும், பாண்டியர் தலைநகரம் கொற்கையிலிருந்து மதுரைக்கு மாறியதும் ஸ்திராபோவின் குறிப்புகளால் தெரிய வருகின்றன.
பிளினி (Pliny the Elder) தனது ‘நேச்சுரலிஸ் ஹிஸ்டோரியா’ (Naturalis Historia/The Natural History) நூலில் இந்தியாவைத் தங்கம், வெள்ளி போன்ற ‘அரிய உலோகங்களின் தொட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நூலில் தமிழகத்தின் மேலைக் கடற்கரையில் இருந்த துறைமுகங்கள் பலவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரகுப்த மௌரியரின் அரசவைக்கு வருகை தந்திருந்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தன்னுடைய ‘இண்டிகா’ என்னும் நூலில் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பாண்டிய அரசு வணிகத்தில் சிறப்புடன் விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் போன்ற வேந்தர்களும் சீன அரசவைக்குத் தூதுவர்களை அனுப்பி வணிக உறவை மேம்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளார்கள். ஆசிரியர் பெயர் தெரியாத ‘தென்கடல் வாணிபச் செலவு’ என்ற நூல் தமிழகத்தைப் ‘பிரிகே’ என்று குறிப்பிட்டு விளக்குகிறது. எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் என்ற கிரேக்க நூல் தமிழகத்திற்கும் உரோமாபுரிக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பு பற்றிய செய்திகளை அறிவிக்கிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய தென்னிந்தியத் துறைமுகங்கள், வணிக நகரங்கள் அங்கு வாழ்ந்த மக்கள் ஆகியவை பற்றியும் இந்நூல் விளக்குகிறது.
அரேபிய வரலாற்றுக் குறிப்புகளை எழுதிய பயணிகளான இபுனே ஹாக்கால், ஈஸ்டாக்கி, அப்துல் ரசாக் முதலியோர் மூலமும், வெனிஸ் பயணியான மார்க்கோ போலோ, இபின் பதூதா ஆகியோர் எழுதிய குறிப்புகள் மூலமும் தமிழர்களின் வணிகச்சிறப்பு மற்றும் வாழ்க்கைச்சூழல் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
தமிழக மன்னர்களுக்குள் தொடர்ந்து பல போர்கள் நடைபெற்றாலும் அவர்கள் வணிகம் சார்ந்த செயல்பாடுகளில் எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை. வணிகர்கள் சமூகத்தில் உயர் மதிப்பு பெற்றவர்களாக இருந்தனர். தமிழகத்தில் கிடைக்கும் அகழாய்வுச் சான்றுகள், அயல்நாட்டவர் எழுதியிருக்கும் குறிப்புகள், சங்க இலக்கியங்களில் புலவர்கள் எழுதிய பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் என அனைத்தும் தமிழ்நாட்டின் கடல்கடந்த வணிகச்சிறப்பை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.