சிகரம்
(முதல் பருவம்)
’முருகன் எழுதினான்’, ‘எழுதியவன் பரிசு பெற்றான்’ இவற்றில் எழுதினான் என்பது வினைச்சொல். எழுதியவன் என்பது எழுவாயாக நின்று பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெற்றுள்ளது. எழுதுதல் என்னும் தொழிலையும் இறந்தகாலத்தையும் காட்டுவதால் வினைச்சொல்லின் தன்மையையும் பெற்றுள்ளது. இவ்வாறு வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.
செயலைக் குறிக்காமல், செயல் செய்தவரைக் குறித்து வருவது வினையாலணையும் பெயர். இது, வேற்றுமை உருபுகளை ஏற்று வரும்.
|
வினைச்சொல் |
வினையாலணையும் பெயர் |
|
எழுதினான் |
எழுதியவன் |
|
படிக்கின்றான் |
படிக்கின்றவன் |
|
வளர்த்தான் |
வளர்த்தவன் |
|
சேர்ந்தார் |
சேர்ந்தவரை |
தொழிற்பெயர்
1. எழுத்தாளரின் தொழில் எழுதுதல்.
2. தையல்காரரின் தொழில் தைத்தல்.
இத்தொடர்களில் எழுதுதல், தைத்தல் என்பன செயல்களைக் குறிப்பன. இவற்றைத் தொழிற்பெயர் என்பர்.
இவ்வாறு ஒரு பொருளின் செயலை அதாவது தொழிலைக் குறிப்பதாக அமைந்தால் தொழிற்பெயர் எனப்படும். இவற்றில் எண், இடம்,
காலம், பால் ஆகியன வெளிப்படுவதில்லை.
எ.கா:பொறுத்தல், படித்தல், ஆடுதல், நடித்தல், எழுதுதல்
இவ்விகுதிகள் இல்லாமலும் தொழிற்பெயர் வருவதுண்டு. அத்தகைய தொழிற்பெயர் இரண்டு வகைப்படும். அவை,
1. முதனிலைத் தொழிற்பெயர்
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற்பெயர் தனக்குரிய விகுதியைப் பெறாமல் பகுதி (முதனிலை) மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா: சோறு கொதி வந்தது, மின்னி இடி இடித்தது.
இங்கு கொதித்தல், இடித்தல் என்று வராமல் கொதி, இடி என்று பகுதிகள் மட்டும் வந்துள்ளன. இவை முதனிலைத் தொழிற்பெயர் என்று அழைக்கப்படுகின்றன.
முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற்பெயரின் விகுதியைப் பெறாத முதனிலை, திரிந்து (மாறுபட்டு) வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா: கெடுவான் கேடு நினைப்பான்.
இத்தொடரில் கெடு என்னும் முதனிலை கேடு என்றும் மாறி வந்துள்ளது. எனவே, முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றழைக்கப்படுகின்றது.
|
தொழிற்பெயர் |
வினையாலணையும் பெயர் |
|
1. தொழிலுக்குப் பெயராக வரும் |
தொழிலைச் செய்த கருத்தாவிற்குப் பெயராக வரும் |
|
2. படர்க்கை இடத்தில் மட்டும் வரும் |
மூவிடத்திலும் வரும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) |
|
3. காலம் காட்டாது |
காலம் காட்டும் |
|
4. திணை, பால், எண், இடம் காட்டாது |
திணை, பால், எண், இடம் காட்டும். |
|
விடு |
முதனிலைத் தொழிற்பெயர் |
|
வீடு |
முதனிலை திரிந்த தொழிற்பெயர் |
|
விடுதல் |
தொழிற்பெயர் |
|
விடுவான் |
வினைமுற்று |
|
விட்டவன் |
வினையாலணையும் பெயர் |