சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.6 கேட்டல் கருத்தறிதல்

கைத்தறி நெசவுக்கலை

இந்தியர்களின் மரபு வழிப்பட்ட ஆடை நெய்யும் முறையே கைத்தறி நெசவுக்கலை. சிறுதொழிலாகச் செய்யப்படும் இதில் இந்தியா முழுக்க ஏறத்தாழ 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான வருமானத்தைத் தருகிறது.

உலகம் முழுவதும் உற்பத்தியாகும் கைத்தறி ஆடைகளில், கிட்டத்தட்ட 95 சதவீத ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 1905ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூரவும் கைத்தறி நெசவாளர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 7ஆம் தேதி இந்தியாவில் தேசியக்கைத்தறி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரச் செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாகக் கைத்தறித் தொழில் விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டின் கைத்தறிப் பிரிவு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்கது. கலைநுணுக்கம் வாய்ந்த கைத்தறி நெசவாளார்கள் தமிழ்நாட்டில் ஏராளம். இருப்பினும் காலப்போக்கில் இத்தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாட்டரசு, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கைத்தறித் துணிகளின் உற்பத்தியை அதிகப்படுத்துதல், புதிய வடிவமைப்புத் திறன்களை மேம்படுத்துதல், கைத்தறித் துணிகளைச் சந்தைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் கைத்தறி நெசவைப் பாதுகாத்து வருகிறது. ‘கைத்தறி ஆதரவுத் திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் கைத்தறி நெசவுக்கலை தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருகிறது எனலாம்.

வினாக்கள்

கைத்தறி நெசவுக்கலை

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 7ஆம் தேதி இந்தியாவில் தேசியக் கைத்தறி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

கைத்தறி ஆதரவுத்திட்டம்

95%

இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகமான வருமானத்தைக் கைத்தறி நெசவுத்தொழில் வழங்குகிறது

தகவல் துளி

தப்பாட்டம்

தப்பு என்னும் தோலிசைக் கருவியை அடித்து இசையெழுப்பி அதற்கேற்ப ஆடும் ஆட்டம் தப்பாட்டம் ஆகும். இது பறையாட்டம், பறைமேளம், பறையடித்தல், தப்படித்தல் என்றும் வழங்கப்படுகிறது. தப்பாட்டத்தில் பாடல் இடம்பெறுவதில்லை. தப்பின் இசையும் அதற்கேற்ற ஆட்டமுமே முதன்மை பெறுகின்றன. தப்பாட்டம் ஆடுவோர் நேர்வரிசையிலும் எதிர்எதிராகவும் வட்டமாகவும் நின்று ஆடுகின்றனர். சுழன்று ஆடுதல், குதித்தல் போன்ற விறுவிறுப்பான ஆட்டமுறைகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும்; தப்பாட்டம், பார்ப்போரையும் ஆடத்தூண்டும் துள்ளல் இசையைக் கொண்டதாகும். ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டுவந்த தப்பாட்டம் இன்றைய நிலையில் பெண்களாலும் விரும்பி ஆடப்பட்டு வருகின்றது.