சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.2 படிப்போம்

கலித்தொகை

பண்பாடு என்பது ஒரு சமூகம் மதித்துப் போற்றும் விழுமியங்களின் வெளிப்பாடு ஆகும். இதுவே ஒரு தனிமனித வாழ்வின் செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது. இதன் அடிப்படையில், தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் பிறருக்கு உதவுதல், அன்பு செலுத்துதல் முதலிய தனிமனிதப் பண்புகளையும் செயல்பாடுகளையும் வரையறுக்கின்றன. இந்தப் பாங்கினைக் கலித்தொகைபாடல் ஒன்றின் மூலம் காணலாம்.

‘ஆற்றுதல்’ என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
‘போற்றுதல்’ என்பது புணர்ந்ததாரைப் பிரியாமை;
‘பண்பு’ எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை;
‘அறிவு’ எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;
‘செறிவு’ எனப்படுவது கூறியது மறாஅமை;
‘நிறை’ எனப்படுவது மறை பிறர் அறியாமை;
‘முறை’ எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
‘பொறை’ எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

- நல்லந்துவனார் (பாடல்: 133, அடிகள்: 6-14)

பாடல் விளக்கம்

ஆற்றுதல் என்பது இல்லாதவருக்கு உதவுதல். போற்றுதல் என்பது தம்மைச் சேர்ந்தாரை விட்டுப் பிரியாமல் இருத்தல். பண்பு என்பது ’எது பெருமைதரக்கூடியது?’ என்று அறிந்து அதன்படி நடத்தல். அன்பு என்பது தன்னைச் சேர்ந்தவர்களை வெறுக்காமல் இருத்தல். அறிவு என்பது அறியாமையால் ஒருவர் பேசும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல். செறிவு என்பது நாம் சொன்ன சொல் தவறாது நடந்துகொள்ளுதல். நிறை என்பது பிறரிடம் சொல்லாமல் மறைத்துவைக்க வேண்டிய செய்திகளைப் பாதுகாத்தல். முறை என்பது தவறு செய்தவருக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தருதல். பொறை என்பது பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.

நூலைப் பற்றி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்று அகப்பொருள் சார்ந்த பாடல்கள் 149-ஆக மொத்தம் 150 பாடல்களைக் கொண்டது இந்நூல். கலிப்பாவால் பாடப்பட்டது. இந்நூலைத் திணைக்கு ஒருவர் என ஐந்திணைகளையும் புலவர்கள் ஐவர் பாடியுள்ளனர். முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார். இந்தப் பாடப்பகுதியில் அமைந்துள்ள பாடலின் ஆசிரியர் நல்லந்துவனார்.

பொருள் அறிவோம்

1. செறாஅமை - வெறுக்காமல் இருத்தல்
2. நோன்றல் - பொறுத்துக்கொள்ளுதல்
3. மறாஅமை - சொன்னசொல் தவறாமல் நடத்தல்
4. வௌவல் - தண்டித்தல்