சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு சமூகம் முன்னோக்கிச் செல்வதற்கான பாதைகளை அமைத்துத் தருபவர்களாகச் சான்றோர்களும் அறிஞர்களும் திகழ்கிறார்கள். அவர்களுடைய எழுத்துகள் அவர்கள் வாழும் காலத்திலும் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பிறகும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. சங்கப்புலவர்களின் பாடல்களும் அப்படியானவைதான். பண்டைய காலத்தில் அந்தப் பாடல்கள் எத்தகைய உயரிய விழுமியங்களைப் பேசின என்பதைப் புறநானூற்றின் பாடல்களைக் கொண்டு நாம் அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நிலம் அன்று மூன்று பெருநாடுகளாகவும் பல சிறுகுறு நிலங்களாகவும் பிரிந்து கிடந்தது. ஆனால், மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்டிருந்தது. புலவர்கள் குறுகிய மனமின்றிப் பரந்த உள்ளத்தோடு மூன்று நாடுகளுக்கும் சென்றனர். பண்பு யாரிடம் இருந்தாலும் பாராட்டினர். எடுத்துக்காட்டாக, கடையெழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர் பாரி. இவர் ஒரு குறுநில மன்னர் ஆவார். இவருக்கும் சேரமானுக்கும் இடையே அவ்வப்போது பூசல்கள் இருந்தன. என்றாலும், பாரியின் நண்பரான கபிலர், சேரமானையும் பாராட்டியிருக்கிறார். இப்படியான பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகத் தமிழ்நிலத்தில் சங்கப்புலவர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.
புலவர்களுள் சிலரே பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலானோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்தே வாழ்க்கை நடத்தினர். பரிசில் வாழ்க்கை மேற்கொண்டோர் அவர்களுடைய தகுதிக்குக் குறைவாக நல்கினால், முகம்மாறி அளித்ததால் அப்பொருளைத் துச்சமெனக் கருதி மறுத்தார்கள். அதோடு, அத்தகையோர்க்கு அறிவுறுத்தவும் செய்தார்கள். ஆர்வமின்றித் தருவதை நாங்கள் விரும்பவில்லை என்று கடியநெடுவேட்டுவனைப் பார்த்துப் பாடினார் பெருந்தலைச் சாத்தனார்; ‘முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே’ என்றார். அதேபோல, தகுதி இல்லாதவரைப் பாடுவதும் அவர் தரும் பரிசிலை ஏற்பதும் சங்கப்புலவர்களின் இயல்பு அன்று.
எங்கெல்லாம் துன்பம் உள்ளதோ அங்கெல்லாம் சான்றோர் தம் கடமையாற்றத் தயங்கவில்லை. புலவர்களுக்கு மன்னர்கள் பரிசில் அளித்தனர் என்பதற்காக அவர்கள் தவறு செய்தபோது பார்த்துக்கொண்டு வாளாவிருக்கவில்லை. அவர்களிடத்துச் சென்று இடித்துரைத்துத் திருத்தினர். மன்னர்கள் தவறாக நடந்தபோதும், செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறியபோதும் அறநெறிகளை எடுத்துக்கூறி அரசியல் சிறந்து விளங்க உதவிய அறிஞர்கள்தான் சங்கப்புலவர்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள. எடுத்துக்காட்டாக, அதிகாரிகளின் சொல்லைக் கேட்டுக் குடிமக்களை வருத்தி அளவுக்கு அதிகமாக வரிபெற்றான் பாண்டியன் அறிவுடை நம்பி. அதைக் கண்ட புலவர் வருந்தினார். அவனுக்குப் புலவர் கூறும் அறிவுரை எக்காலத்து அரசுக்கும் ஏற்ற பாடமாக அமையும். ’அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே/ கோடி யாத்து நாடு பெரிது நந்தும்’ என்று பாடினார். மக்களுடைய நிலையறிந்து அன்பு கெடாதவாறு வரி வாங்க வேண்டும் என்பதை நயம்பட எடுத்துரைத்த புலவர் பாராட்டுக்குரியவர்.
பண்பாட்டுக் காவலர்களாகவும் அரசியல் அறிஞர்களாகவும் நட்பும் நன்றியும் உடையவர்களாகவும் உலகுக்கு உயரிய குறிக்கோள்களைச் சுட்டிக்காட்டும் அறவோர்களாவும் இருந்தனர்; அஞ்சாமை நிறைந்த அறிஞர்களாகவும் ஆளுவோர்க்கு அறமுரைத்தவர்களாகவும் வறுமையிற் செம்மையைப் போற்றிய பெருமித வாழ்வு கொண்டவர்களாகவும் பண்டைய தமிழ்ச்சான்றோர்கள் விளங்கியுள்ளனர்.
| 1. | தாக்குதல் | - | விளைவு | ||
| 2. | பிளவு | - | பிரிவு | ||
| 3. | பூசல் | - | சண்டை | ||
| 4. | பரிசில் | - | பரிசு | ||
| 5. | செம்மை | - | நேர்மை |