சிகரம்
(இரண்டாம் பருவம்)
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.
இரண்டு சொற்கள் சேர்ந்து அமைகிற தொடர்களில், இரு சொற்களுக்கும் இடையில் வேற்றுமை உருபுகள், உவம உருபுகள், கால இடைநிலைகள் போன்ற இடைச்சொற்கள் மறைந்து வருமேயானால், அத்தொடர்களைத் ’தொகைநிலைத்தொடர்கள்’ என்று வழங்குவர்.
வேற்றுமை உருபுகள் வெளிப்படத் தோன்றாமல் மறைந்துநின்று பொருள் உணர்த்தும் தொடர் வேற்றுமைத்தொகை எனப்படும்.
எ.கா: நண்பன் வீடு
’நண்பனின் வீடு’ என்று வேற்றுமை உருபோடு நிற்க வேண்டிய தொடர், ‘நண்பன் வீடு’ என்று வேற்றுமை உருபு இல்லாமல் வந்துள்ளது; அதாவது வேற்றுமை உருபு ‘இன்’ மறைந்து வந்துள்ளது. எனவே, இது ‘வேற்றுமைத்தொகை’ ஆகும்.
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத்தொகை எனப்படும். வினைத்தொகையைக் காலம் கலந்த பெயரெச்சம் என்று வழங்குவர்.
எ.கா: வீசுதென்றல்
பண்புத்தொகை என்பது ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகள் மறைந்து நிற்க, பண்புப்பெயரோடு பண்புப்பெயர் தொடர்வதாகும்.
பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.
பண்பை உடையது எதுவோ அது பண்பு எனப்படும்.
எ.கா: செந்தாமரை
இங்குச் ‘செம்மை’ என்பது பண்புப்பெயர்
‘தாமரை’ என்பது பண்புப்பெயர்
உவமைத்தொகை என்பது போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.
எ.கா: பவளவாய் (இது பவளம் போன்ற வாய் என விரியும்.)
பவளம் – உவமானம் : வாய் – உவமேயம்
அளவுப்பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத்தொகை எனப்படும். அளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.
எ.கா: ஒன்றேகால் (ஒன்றும் காலும் என விரியும்)
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத்தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்துநின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
எ.கா: பூங்குழல் வந்தாள்
இத்தொடரில் உள்ள ’பூங்குழல்’ என்னும் சொல் ‘பூவை அணிந்த கூந்தல்’ என்னும் பொருளைத் தரும். இதில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகும். மேலும், ’பூங்குழல்’ என்னும் சொல், ‘வந்தாள்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பூவை அணிந்த கூந்தலை உடைய பெண் வந்தாள் எனப் பொருள் தருகிறது. எனவே, இது வேற்றுமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.