சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.6 கேட்டல் கருத்தறிதல்

தொ.பரமசிவன்

தமிழ்ப் பேராசிரியர், தமிழ் மானுடவியலாளர், தொல்பொருள் ஆய்வாளர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் தொ.ப. என்று அழைக்கப்படும் தொ.பரமசிவன். பண்பாட்டு ஆய்வுகளில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர் தொ.ப.; நாட்டார் வழக்குகளையும் சடங்குகளையும் உயிர்ப்போடு பதிவுசெய்தவர். சிறு சடங்குகள் முதல் நீத்தார் சடங்குகள் வரை அனைத்தையும் காரணகாரிய விளக்கங்களுடன் தம்முடைய படைப்புகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பண்பாடு குறித்துத் தொ.பரமசிவன் முன்வைத்த பார்வைக்குத் தற்காலத் தமிழ் உரையாடல்களில் முதன்மையான இடம் உண்டு. தமிழர் பண்பாடு குறித்த பல நுட்மான செய்திகளைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். எளிய மக்களிடம் சிதறிக்கிடக்கும் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத்தேடிக் கண்டறிந்தவர் அவர்.

அடித்தள மக்களிடம் இருக்கும் பண்பாடுகளைக் காக்க வேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைத்தவர் தொ.ப.; எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். ’பண்பாட்டு அசைவுகள்’, ’அறியப்படாத தமிழகம்’, ’உரைகல்’, ’தெய்வம் என்பதோர்’, ’சமயங்களின் அரசியல்’ போன்ற இவரது நூல்கள், தமிழர்தம் பண்பாட்டைத் தாங்கி நிற்கும் அரிய ஆவணங்களாகும்.

வினாக்கள்

தொ.ப. என்று அழைக்கப்படுபவர் தொ.பரமசிவன்

சிறு சடங்குகள் முதல் நீத்தார் சடங்குகள் வரை அனைத்தையும் காரண காரிய விளக்கங்களுடன் தம்முடைய படைப்புகளில் தொ.ப. குறிப்பிட்டுள்ளார்.

அடித்தள மக்கள்

எளிய மக்களிடம் சிதறிக்கிடக்கும் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை தொ.ப. தேடிக் கண்டறிந்தார்..

பண்பாட்டு அசைவுகள், அறியப்படாத கழகம், உரைகல்.

தகவல் துளி

தமிழின் இலக்கிய வரலாறு போலவே அச்சு வரலாறும் தொன்மையானது. 1554 பிப்ரவரி 11 அன்று போர்த்துக்கீசிய நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் முதல் தமிழ் நூல் வெளியானது. ‘தமிழ் மொழியிலும் போர்த்துக்கீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றறேடு’ என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. தூத்துக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ, தோமா த குருசு எனும் மூவர் அந்நூலை உருவாக்கினர். இந்த நூலில் தமிழ்ச்சொற்களெல்லாம் லத்தீன் வரி வடிவத்தில் எழுதப்பட்டிருந்தன. முழுவதும் தமிழிலேயே உருவான முதல் நூல் ‘தம்பிரான் வணக்கம்’. இது 1578-இல் அச்சிடப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் தவிர்த்துப் பிற மொழிகளில் அச்சாக்கம் பெற்ற முதல் மொழி என்னும் பெருமை தமிழுக்கு உண்டு.