சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.2 படிப்போம்

தமிழோவியம்
(தமிழ்ப்பண்பாடு)

தனிமனிதரின் நடத்தைக்கும் சமூகத்தின் நடத்தைக்கும் பெரிதும் அடிப்படையாக இருப்பது பண்பாடு. மக்கள் தாம் வாழும் சமூகத்தை மையமாக வைத்தே பண்பாட்டை அமைத்துக்கொள்கின்றனர். கவிஞர்களும் தங்கள் கவிதைகளின் வழியே தம் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. அவ்வாறான கவிதைகள் சமூகத்தின் பழக்கவழக்கங்களையும் சூழலையும் புரிந்துகொள்ளப் பெரிதும் துணைநிற்கின்றன.

தமிழ்ப் பண்பாடு
தமிழ்ப் பண்பாடு
தலை சிறந் தெனத்
தமிழ்ப் பண்பாடு...

வாசலில் போடும் கோலத்திலும் - அவர்
மனத்தின் அழகியல் தத்துவங்கள்
பூசும் சந்தனக் கலவையிலும் - நன்கு
பொங்கும் அனுபவ முத்திரைகள்...

- தமிழ்ப் பண்பாடு

பருவம் தெறிக்கும் பார்வையிலே - காதல்
பயிரின் விதைவிழும் ஒருநாளில்
உருவும் வாளுறை சூல்கொண்டே - புகழ்
ஒத்திகை பெறுமதன் முதல்நாளில்...

- தமிழ்ப் பண்பாடு

ஒருவன் ஒருத்தியாய் இல்லறமாம் - அதில்
ஒப்புர வாயிரம் சத்தியமாம்
விருந்து வருகிற பொழுதுகளை - புது
வெற்றிலை பாக்கு சிவப்பாக்கும்...

- தமிழ்ப் பண்பாடு

மானம் பெரிதென வாழ்ந்திடுவான் - பழி
வந்துடல் மொய்க்கவும் சம்மதியான்!
தானம் என்பவர் கைகளிலே – அவன்
தன்னையே தருவான் நிம்மதியாய்!

- ஈரோடு தமிழன்பன்

பாடலின் பொருள்:

தலைசிறந்தது தமிழ்ப் பண்பாடு. வாசலில் போடும் கோலத்தில் அவருடைய மனத்திலுள்ள அழகுணர்வு தொடர்பான தத்துவங்கள் வெளிப்படும். பூசும் சந்தனக் கலவையில் அவருடைய அனுபவ அறிவு வெளிப்படும். இவற்றில் தமிழ்ப் பண்பாடு நிறைந்திருக்கிறது. பருவத்தில் காதல் முளைக்கும்போதும் வாளைக் கையிலேந்திப் புகழ்பெறும் நாளுக்கான ஒத்திகை பார்க்கும்போதும் தமிழ்ப் பண்பாட்டைப் போற்று. ஒருவனுக்கு ஒருத்தி என்றதன் அடிப்படையில் இல்லற வாழ்க்கையைத் தமிழர்கள் அமைத்துக்கொள்கிறார்கள். விருந்து நாள்களில் வெற்றிலைபாக்கு சாப்பிடுவதைத் தமிழர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவற்றில் தமிழ்ப் பண்பாடு நிறைந்திருக்கிறது. உயிரைவிட மானம் பெரிதென வாழக்கூடியவர்கள் தமிழர்கள். தன் மீது யாரும் பழி சுமத்திவிடக் கூடாது என்று தீர்மானமாக இருப்பவர்கள். தானம் என்றால் தன்னையே தரக்கூடிய அளவுக்குத் தானத்தில் சிறந்திருப்பவர்கள். இவற்றிலும் நிறைந்திருக்கிறது தமிழ்ப் பண்பாடு.

நூலைப் பற்றி

ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘தமிழோவியம்‘ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது இந்தக் கவிதை. ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதைகளைப் படைத்துள்ளார். ’சிலிர்ப்புகள்’, ’தோணிகள் வருகின்றன’, ’ஊமை வெயில்’, ’விடியல் விழுதுகள்’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘வணக்கம் வள்ளுவ!‘ என்னும் கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. இவரது ‘தமிழன்பன் கவிதைகள்‘ என்னும் தொகுப்பு நூல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது.

பொருள் அறிவோம்

1. ஒப்புரவு - உதவுதல்
2. விருந்து - புதிது
3. பண் - இசை
4. பீடு - வலிமை / பெருமை
5. தானம் - கொடை / அறச்செயல்
6. தொகுத்தல் - சேர்த்தல்
7. ஒத்திகை - செய்துபார்த்தல்
8. தீர்மானம் - முடிவு