சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.3 படிப்போம்

பேச்சரங்கம்
நாடுகளும் நாகரிகங்களும்

நடுவர் : அனைவருக்கும் வணக்கம்! மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகம் ஆகியன அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவு, உடை, விளையாட்டு, இசை முதலியவற்றில் உலக அளவில் பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. எனினும், சில தனித்த பண்பாடுகளும் உலகளவில் சிறந்து விளங்குகின்றன. பரந்த உலகில் வாழும் மக்களின் பண்பாட்டுச் சிறப்பினை முதலில் பேச வருகிறார் செல்வன்.
செல்வன் : நடுவர் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் வணக்கம்! உலகின் தலைசிறந்த பண்பாடுகளைப் பின்பற்றிவரும் நாடுகளுள் ஒன்று தென்கொரியா. தென்கொரிய மக்கள் உணவகத்திற்குச் சென்றால்கூட உணவு தயாராகி வரும்வரை தங்கள் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுகிறார்கள். அங்குள்ள உணவகங்களில் சிறு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது தங்களுக்குப் பிடித்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்கள். சிறுசிறு தேநீர்க் கடைகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் இந்தப் பழக்கம் தென்கொரியாவின் சிறந்த பண்பாடுகளுள் ஒன்றாக உள்ளது. நல்லதொரு கருத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துவிடைபெறுகிறேன்.
நடுவர் : தென்கொரியப் பண்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துரைத்த செல்வனுக்கு நன்றி. அடுத்ததாக எகிப்து நாட்டின் ஏற்றமிகு பண்பாட்டைப் பேச வருகிறார் நளினி.
நளினி : வணக்கம் நண்பர்களே! உலகின் தலைசிறந்த பண்பாட்டைக் கொண்ட எகிப்து நாட்டைப் பற்றி உங்களிடம் பேசுவதில் மகிழ்ச்சி. அங்கே ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பொருளாதாரச் சுதந்திரம், கல்விகளிலும் வேலைவாய்ப்புகளிலும் சம உரிமை பெற்றிருந்தனர். வேளாண்மையில் எகிப்தியர்கள் சிறந்து விளங்கினர். உலகிலேயே முதன்முதலாக எகிப்தில்தான் ரொட்டி தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எகிப்தியர்களின் முக்கியமான உணவுப்பொருள் இது. பிளாக்ஸ் செடியின் தண்டிலிருந்து எடுத்த லினன் என்ற நூலிலிருந்து ஆடை தயாரித்து அணிந்திருந்தார்கள். நைல் நதியில் கிடைத்த களிமண்ணுடன் வைக்கோல் சேர்த்துப் பொருள்கள் தயாரித்தார்கள். தங்கத்தால் ஆன அணிகலன்களை ஆண்களும் பெண்களும் விரும்பி அணிந்தனர். தாங்கள் அணியும் அணிகலன்களில் பல வண்ணங்களில் ஒளிவிடும் டாக்வா கற்களைப் பயன்படுத்தினர். பழமையான எகிப்திய நாகரிகத்தைப் பற்றிப் பேச வாய்ப்பளித்த நடுவர் அவர்களுக்கு நன்றி.
நடுவர் : நளினியின் கருத்துகள் மிகச் சிறப்பானவை. அடுத்ததாக, சுவிட்சர்லாந்து நாட்டின் பண்பாட்டைச் சுவையாக எடுத்துரைக்க வருகிறார் மகிழினி.
மகிழினி : நடுவர் அவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வணக்கம்! இசையில் ஆர்வம் கொண்ட நாடு சுவிட்சர்லாந்து. இங்கு அதிகமான இசைப் பள்ளிகள் உள்ளன. பண்பாட்டோடு தொடர்புடைய நாடோடிப் பாடல்களை இங்கு வாழும் மக்கள் விரும்பிப் பாடுகின்றனர். இசையின் மீது இவர்கள் கொண்டுள்ள ஆர்வம் சிறப்புடையதாக இருக்கிறது. இசையைப் போலவே விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் சுவிட்சர்லாந்து மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உடற்பயிற்சித் திருவிழாவை நடத்துகின்றனர். இந்தத் திருவிழா நடைபெறும்போது வீரர்கள் மீது மலர் தூவி அவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். உலகின் அழகான நாடுகளுள் ஒன்றான சுவிட்சர்லாந்தைப் பற்றிய சுவையான செய்திகளை உங்கள் முன் எடுத்துவைத்துள்ளேன். என் பேச்சைக் கேட்க உங்கள் பொன்னான நேரத்தைத் தந்தமைக்கு நன்றி.
நடுவர் : மகிழினியின் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்து, பேச்சாளர் முகில் இந்தியநாட்டின் பண்பாடு பற்றிப் பேச வருகிறார்.
முகில் : அனைவருக்கும் வணக்கம்! இந்தியா பல மொழிகளும் பண்பாடுகளும் நிறைந்த நாடு. மிகப்பழமையான பண்பாட்டைக் கொண்ட இந்நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடைப்பிடிக்கப்படும் நிகழ்வைச் சான்றாகக் கூறுகிறேன். கேரள மாநிலத்தின் பெரும்குளம் கிராமத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்திடப் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கின்றனர். கிராமத்தின் தெருக்களில் ஆங்காங்கே கூடுகள் போன்று மரத்தால் செய்யப்பட்ட அலமாரிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அங்கிருந்து எடுத்துக்கொள்கின்றனர். படித்து முடித்ததும் மீண்டும் புத்தகத்தை அங்கேயே வைத்துவிடுகின்றனர். இக்கிராமத்தைப் புத்தகக் கிராமம் என்று அழைக்கின்றனர். மலையாளத்தில் ’புஸ்தகக்கூடு’ என்று அழைக்கப்படும் இந்தச் சேவையைப் பெரும்குளம் கிராமத்தினர் இலவசமாக வழங்குகின்றனர். வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் இம்முயற்சி சிறந்ததொரு பண்பாடு. இது போன்றே இந்தியாவில் பரந்துபட்ட பல்வேறு பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. சிறந்ததொரு வாய்ப்பை நல்கிய நடுவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நடுவர் : உலக நாடுகள் வெவ்வேறு விதமான பண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இன்றைய பேச்சரங்கில் சிறந்த பண்பாடுகளைப் போற்றும் நாடுகள் பற்றிப் பேசினார்கள். அருமையான கருத்துகளை முன்வைத்த பேச்சாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு நாடும் நிலம், சூழல், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டைப் பின்பற்றுகிறது. அத்தகைய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டே அந்ந நாடுகளை அடையாளம் காணலாம்.

பொருள் அறிவோம்

1. உரைத்தல் - சொல்லுதல்
2. ஆர்வம் - விருப்பம்
3. நிகழ்வு - நடைபெறும் செயல்
4. வாசிப்பு - படித்தல்
5. நல்கிய - கொடுத்த