சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.2 படிப்போம்

விஞ்ஞானி

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது அறிவியல் தொழில்நுட்பயுகம் அல்லது கல்வியுகம் என்று அழைக்கப்படுகிறது. பரந்து விரிந்த இவ்வுலகை நம் உள்ளங்கைக்குள் கொண்டுவந்த பெருமை அறிவியலையே சேரும். அறிவியல் துறையில் அயராது உழைத்துப் பலவிதக் கருவிகளைப் படைத்த அறிஞர்களின் பெருமையையும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் கண்டுபிடிப்புகளின் இன்றியமையாமையையும் கூறும் கவிஞர் மீராவின் கவிதையை இந்தப் பாடப்பகுதியில் காண்போம்.

உலகை உயரத்தில்
உண்மையிலே தூக்கி வைக்கப்
பலகை கொடுத்தவன் யார்?
பகுத்தறிவை வளர்த்தவன் யார்?
காற்றை அடக்கிக்
கடல்மீதும் ஆணையிடும்
ஆற்றல் மிகுந்தவன் யார்?
ஆற்றில் மிகும் நீரைத்
தேக்கியளிக்கின்ற
திட்டம் அளித்தவன் யார்?
நீக்கமற எங்கும்
நிறைந்துள்ள மின்வெளிச்சம்
படைத்துக் கொடுத்தவன் யார்?
பாருலகச் செய்திகளைத்
தொகுத்ததெளிதாய் அச்சாக்கும்
தொழில் கற்றுத்தந்தவன் யார்?
காலைச் சிற்றுண்டியினைக்
கல்கத்தாவில் முடித்து
மாலை விருந்துக்கு
மதுரை வரச் செய்தவன் யார்?
அமெரிக்க நாட்டில் ஓர்
அறிவாளி பேசுவதைக்
குமரிக் கரையிருப்போர்
செவி குளிரக் கேட்டிருக்கச்
செய்தவன் யார்? வேண்டுங்கால்
செயற்கை மழைநீரைப்
பெய்விக்க முயலும்
பெருமைக்குரியவன் யார்?
மருட்சி பெறச் செய்யும்
மகத்தான காட்சியுடன்
திரைப்படத்தை உருவாக்கித்
தந்தவன் யார்?... விஞ்ஞானி.
விஞ்ஞானி பரப்பும்
வெளிச்சம் இல்லையென்றால்
அஞ்ஞான இருளை
அகற்ற வழியில்லை
இந்நாளில் காணும்
ஏற்றமிகு கருவியெல்லாம்
முன்னாளில் கிடையாது;
முன்னேற்றம் கிடையாது.
கடல்நீரில் பயிர்விளைச்சல்
கண்டு பெருக்கிடவும்
படகேறிச் சுடுகின்ற
பாலையிலே சென்றிடவும்
மாண்டவனை எழுப்பிடவும்
மனிதன் தனையுயர்த்தி
ஆண்டவனைப் போலெங்கும்
ஆட்சி செலுத்திடவும்
விஞ்ஞானம் வழிவகுக்கும்
வெற்றிக் கையெழுத்திட்டு
மெய்ஞ்ஞானப் பத்திரத்தை
மேதினிக்கு இயற்றிவைக்கும்.

- மீரா

பாடலின் பொருள்

உலகை வளர்ச்சிப் பாதையில் உயரே தூக்கிவைத்தவர், பகுத்தறிவை வளர்த்தவர், காற்றையும் அடக்கிக் கடலிடமும் கட்டளையிடும் ஆற்றல் மிகுந்தவர், செழித்தோடும் ஆற்று நீர் வீணாகாமல் தேக்கிவைத்து அணை கட்டியவர், மின்சார வெளிச்சத்தைக் கொடுத்தவர், அறிவுப் பகிர்வுக்கான செய்திகளை அச்சிடக் கற்றுக்கொடுத்தவர், தொலைதூரப் பயணங்களை எளிதாக்கியவர், உலகின் எந்த மூலையிலுள்ள தகவலையும் உலகின் எந்த மூலைக்கும் கொண்டுசேர்த்தவர், வேண்டுமென்றால் இயற்கையின் வரமான மழையையே செயற்கையாகப் பெய்விக்க முயல்பவர், மகத்தான காட்சிகளுடன் திரைப்படத்தை உருவாக்கியவர்... இந்த எல்லாப் பெருமைக்கும் உரியவர் விஞ்ஞானிதான்.

விஞ்ஞானிகள்தான் இந்த உலகுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். இந்த வெளிச்சம் இல்லையென்றால், அறியாமை இருளை அகற்ற முடிந்திருக்காது. நம்முடைய ஏற்றத்துக்கு உதவக்கூடிய இந்தக் கருவிகளெல்லாம் முற்காலத்தில் கிடையாது. அறிவுப்பாதையில் அழைத்துச்செல்லும் இத்தகைய அறிவியல் இல்லையென்றால் வாழ்வில் முன்னேற்றம் இருந்திருக்காது. இன்னும் ஒரு படி மேலே சென்று வருங்காலத்தில், கடல்நீரிலே பயிர் விளைச்சல் செய்வதற்கும், வெப்பம் கொதிக்கும் பாலையிலே படகில் செல்வதற்கும், இறந்தவர்களை எழுப்புவதற்கும், மனிதன் தன்னை உயர்த்திக்கொண்டு ஆண்டவனைப் போல் எல்லாவற்றையும் ஆள்வதற்கும் அறிவியல் வழிவகுக்கும். அறிவு எனும் பத்திரத்தில் வெற்றி எனும் கையெழுத்திட்டு இந்த உலகை அறிவியல் வழிநடத்தும். இவ்வாறு அறிவியலின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார் மீரா.

நூலைப் பற்றி

’விஞ்ஞானி’ எனும் இக்கவிதை ’மூன்றும் ஆறும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பில் மொத்தம் ஒன்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இதனை எழுதியவர் மீரா. இவரது இயற்பெயர் மீ.இராசேந்திரன். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரு தளங்களிலும் பரவலாக அறியப்பட்டவர். சிவகங்கை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதிய ‘ஊசிகள்’, ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ ஆகிய கவிதை நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. இவர் ’அன்னம் விடு தூது’, ’கவி’ ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். அன்னம் பதிப்பகத்தின் மூலம் படைப்பாளர்கள் பலரை அறிமுகப்படுத்தி ஊக்குவித்தார்.

பொருள் அறிவோம்

1. வாகை - வெற்றி
2. ஈகை - கொடுத்தல்
3. விஞ்ஞானம் - அறிவியல்
4. விஞ்ஞானி - அறிவியலாளர்
5. பகுத்தறிவு - ஆய்ந்து அறிதல்
6. செவி - காது
7. அஞ்ஞானம் - அறியாமை
8. மாண்டவன் - இறந்தவன்
9. மெய்ஞ்ஞானம் - உண்மையறிவு
10. மேதினி - உலகம்