சிகரம்
(இரண்டாம் பருவம்)
இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களுள் ஒருவர், தொழில்நுட்ப வல்லுநர், மிகச்சிறந்த நிருவாகி, இந்தியாவின் 11ஆவது குடியரசுத்தலைவர், இந்திய ஏவுகணை நாயகர், நல்ல ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், ‘இளைஞர்களின் கையில்தான் எதிர்கால இந்தியா’ என்று முழக்கமிட்டவர்ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். தமிழ்நாட்டிலுள்ள இராமேஸ்வரம் தீவில் 1931 அக்டோபர் 15 அன்று ஜைனுலாப்தீன், ஆஷியம்மா தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார் அப்துல் கலாம். வறுமையான பின்னணியிலிருந்து முகிழ்த்தெழுந்து இலட்சக்கணக்கான இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார். பள்ளிக்கட்டணம் செலுத்தக்கூட வழியில்லாமல், இளம் வயதிலேயே வேலைக்குச் சென்றார். இப்படியான சூழல் நிலவியபோதும் தம்முடைய கனவுகளில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. |
|
அவர் விடாமுயற்சியுடன் படித்தார். இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, தொழில்நுட்பக் கல்வியில் தென்னகத்தின் மணிமகுடமாகக் கருதப்பட்ட மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளிப் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்தார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் அப்துல் கலாம் பெயரும் இருந்தது. ஆனால், பணம் செலுத்துவதற்கான வசதி இல்லை. இந்த இக்கட்டான சூழலில் அவருடைய சகோதரி ஜோஹராதான் உதவினார்; தங்க வளையல்களையும் சங்கிலியையும் அடமானம் வைத்துக் கொடுத்தார். தன்னுடைய சொந்தச் சம்பாத்தியத்தில் அந்த நகைகளை மீட்டுக்கொடுப்பேன் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்ட அப்துல் கலாம் சொல்கிறார்: ‘அந்தக் கட்டத்தில் பணம் சம்பாதிக்க எனக்குத் தெரிந்த ஒரே வழி தீவிரமாகப் படித்து உதவித்தொகை பெறுவது மட்டுமே.’
மெட்ராஸ் தொழில்நுட்ப வளாகத்தில் அப்துல் கலாம் கண்ட காட்சிதான் அவரைப் பரவசத்தில் திக்குமுக்காட வைத்தது. ஓரம் கட்டப்பட்ட இரண்டு விமானங்களை அங்கே நிறுத்தியிருந்தார்கள். எல்லா மாணவர்களும் விடுதிக்குப் போன பிறகு, அவர் மட்டும் நீண்ட நேரம் தனியாக அந்த விமானங்களின் அருகிலேயே அமர்ந்திருப்பார். பறவையைப் போல் சுதந்திரமாகப் பறக்க வேண்டும் என்ற மனிதனின் விடாப்பிடியான உறுதியை நினைத்து வியப்படைந்தார். இந்த நினைவுகளில் அவருடைய மனம் சிறகு விரித்துப் பறக்கும்.
இதன் விளைவாக, விமானப் படையில் விமானியாக வேண்டும் என்று அவர் கனவுகண்டார். அவருடைய அப்பாவோ அவரை கலெக்டராக்கிப் பார்க்க விரும்பினார். வானத்தில் பறக்க ஆசைப்பட்ட அப்துல் கலாம், பின்னாளில் இராக்கெட் பொறியாளராக உருமாறி விண்வெளியை எட்டினார். ஏவுகணைநாயகராக அவதாரம் எடுத்தார். இந்தக் கனவு நாயகர், இந்திய இளைஞர்கள் எல்லோரும் கனவுகாண வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு; உன்னையும் என்னையும் உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு’ என்று கனவுக்குப் புதிய வரையறையை உருவாக்கினார். ‘நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நம்முடைய கடமை’ என்றார்.
படிப்பை முடித்த பிறகு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளிப் பொறியாளராகப் பொறுப்புவகித்தார். இந்தக் காலகட்டத்தில் அப்துல் கலாம் ஆற்றிய பணி அளப்பரியது.துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்காற்றினார். 1980இல் SLVIII இராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது உலக அளவில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது. 1998இல் நடந்த பொக்ரான்-II அணு ஆயுதப் பரிசோதனையில் மிகப்பெரும் பங்காற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அப்துல் கலாம், ஐந்து ஏவுகணைத் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
இளைய தலைமுறைக்குப் பயன்படும் விதமாக அப்துல் கலாம் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘அக்னிச் சிறகுகள்’, ’இந்தியா 2020’, ’எழுச்சி தீபங்கள்’ ஆகியவை அவருடைய முக்கியமான நூல்களாகும்.
விண்வெளித்துறையில் அப்துல் கலாம் புரிந்த தொடர் சாதனைகளுக்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கிக் கௌரவித்தது. இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய உயரிய விருதான பாரத ரத்னாவும் இவருக்கு வழங்கப்பட்டது. 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர், ‘மக்களின் ஜனாதிபதி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்றார்.
| 1. | முழக்கம் | - | உரக்கச் சொல்லுதல் | ||
| 2. | சங்கல்பம் | - | உறுதி | ||
| 3. | அக்னி | - | தீ அல்லது நெருப்பு | ||
| 4. | ஆற்றிய | - | செய்த |