சிகரம்
(இரண்டாம் பருவம்)
கல்வியாளர், அறிவியலாளர், தமிழறிஞர், கவிஞர், நூலாசிரியர், பேராசிரியர் எனப் பன்முக ஆளுமையாக விளங்கியவர் வா.செ.குழந்தைசாமி. இவர் உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்களின் அடையாளத்தைத் தமிழ்மொழியின் மூலம் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றார். அந்த நோக்கத்தில் தமிழைப் புலம்பெயர்ந்த தமிழர்களும் எளிதாகக் கற்க, இணையத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்க முன்னோடியாக இருந்தார்.
தமிழ்நாட்டில் கணினித்தமிழ் வேரூன்றத் தொடங்கும்போது தமிழ்நாடு அரசு நாடிய குறிப்பிட்ட சில அறிஞர்களுள் ஒருவர் இவர். இணையம் வழியாகத் தமிழைக் கற்பிக்க நிறுவப்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிறுவனத்தலைவராக வழிகாட்டினார். தமிழில் உயர்மட்ட அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கற்பிப்பதில் பெருமுனைப்பு கொண்டு பல முயற்சிகளைத் தொடங்கினார். பல துறைகளின் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தொகுத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த பெரும்பணியை இவர் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தினார். தமிழைச் செம்மொழியாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு இவரது தமிழ்த்தொண்டுகளைப் பாராட்டி, கௌரவ முனைவர் பட்டமளித்தது.
கவிஞர் குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதைகளை எழுதினார். அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். இவரது ’அறிவியல் தமிழ்’, ’வாழும் வள்ளுவம்’, ’உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ’வாழும் வள்ளுவம்’ நூலுக்காக இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றார். கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இவரது தொண்டிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை இந்திய அரசு அளித்துச் சிறப்பித்தது. இவரது தொழில்நுட்பத் தலைமையையும் தொண்டையும் பாராட்டி காமன்வெல்த்நாடுகளின் அமைப்பு விருது வழங்கியது.
வ.செ. குழந்தைசாமி
தமிழ் இணையக் கல்விக்கழகம்
பத்மஸ்ரீ, பத்மபூஷன்
கவிஞர் குலோத்துங்கன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்