சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு நாட்டின் வளர்ச்சி வெவ்வேறு காரணிகளால் அளவிடப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானது தொழில்துறையாகும். தொழில்நுட்பத் திறனில் சிறந்து விளங்கும் நாடுகளால்தான் ஆலைகளைப் பெருக்க முடியும்; பொருளாதாரத் தன்னிறைவை எட்ட முடியும். இது குறித்து மகாகவி பாரதியார் குறிப்பிடுவனவற்றை இந்தப் பாடப்பகுதியில் காணலாம்.
பாரத தேசம்என்று பெயர்சொல்லுவார் - மிடிப்- பாரதியார்
பாரத தேசம் என்று சொல்லும்போதே வறுமை, பயம், துயர், பகை ஆகியவற்றை வெல்லும் வல்லமையை மக்கள் பெறுவர்.
காசியிலே அறிஞர்கள் பேசும் விரிவுரைகளைத் தெற்கேயுள்ள காஞ்சியில் இருந்தபடியே கேட்கும் கருவியை நாம் செய்ய வேண்டும். ராஜ புத்திர வீரர்களுக்குக் கன்னட தேசத்துத் தங்கத்தைப் பரிசளிக்கவேண்டும்.
பட்டு உடை, பருத்தி உடை எல்லாம் செய்து மலை மலையாகக் குவித்துவைத்து, அவற்றை உலகம் முழுவதுமிருந்து வரும் வணிகர்களிடம் விற்று நம் நாட்டுப் பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.
ஆயுதங்களும் காகிதங்களும் நாமே செய்ய வேண்டும். இதற்காக ஆலைகளும் தொழில் வளர்வதற்கேற்ற கல்விச்சாலைகளும் நம் நாட்டிலேயே உண்டாக்க வேண்டும். ஓயக் கூடாது, தலைசாயக் கூடாது. உண்மைகளைப் பேச வேண்டும். கொடையுள்ளம் கொள்ள வேண்டும்.
குடைகள், உழுபடைகள், கோணிச்சாக்குகள், இரும்பு ஆணிகள் ஆகியவற்றையும் நாம் செய்ய வேண்டும். விண்ணிலும் மண்ணிலும் செல்லும் வாகனங்கள் செய்ய வேண்டும். பிரம்மாண்டமான கப்பல்கள் செய்யவேண்டும்.
நாம் மந்திரங்கள் கற்பதுபோல் கைவினைத்திறனையும் கற்போம். ஆகாயத்தை அளப்போம். கடலை அளப்போம். நாட்டிலே சாலைகளும் வீதிகளும் சந்திகளும் பெருக்குவதோடு, சந்திர மண்டல இயல்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
காவியங்கள், கலைகள், ஓவியங்கள் செய்ய வேண்டும். காடு வளர்க்க வேண்டும். அதோடு, ஊசிகளும் செய்ய வேண்டும். உலகத் தொழில் அனைத்தும் மனமாரச் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தொழில், தொழில்நுட்பம், கலை, அறிவியல் ஆகியவற்றை எடுத்துக்கூறுகிறார் பாரதியார்.
பாரதியார் கவிதைகளில் ‘பாரத தேசம்’ என்னும் தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய விடுதலைக்காகப் பாரதியாரால் பாடப்பட்ட ‘வந்தே மாதரம் என்போம்’, ‘எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி, ‘மின்னு மிமய மலையெங்கள்’ ஆகிய மூன்று பாடல்களும் ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டன. பாரதியின் அச்சேறிய முதல் நூல் இதுதான். பின்னர் மேலும் சில பாடல்கள் சேர்க்கப்பட்டு 14 பாடல்கள் கொண்ட சிறு நூலாக இது வெளிவந்தது. பாரதியார் தமிழ் நவீனக் கவிதைகளின் முன்னோடி ஆவார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். மகாகவி, தேசியக்கவி, மக்கள்கவி, முண்டாசுக்கவி என்று அழைக்கப்படுகிறார். பாரதியாரின் படைப்புகள் தமிழ்நாடு அரசால் 1949ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகள் பாரதியாருடையவை.
| 1. | வண்மை | - | கொடை | ||
| 2. | ஞாலம் | - | உலகம் | ||
| 3. | திரவியம் | - | செல்வம் | ||
| 4. | காசினி | - | உலகம் | ||
| 5. | பறப்பு | - | விரைவு | ||
| 6. | இயல் | - | தன்மை |