சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.3 படிப்போம்

திரைக்கலை நுட்பங்கள்

திரைப்படம் என்ற கலைவடிவம் இன்று உலகின் மூலைமுடுக்கெங்கும் செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருக்கிறது. பலதரப்பட்ட மக்களுக்கு அது திருவிழா போன்ற கொண்டாட்டமாகத் திகழ்கிறது. எண்ணற்ற திறமையான கலைஞர்களின் கூட்டு உழைப்பால் உருவாகும் திரைப்படக் கலையானது பெரும் வணிக நோக்கத்தையும் கொண்டுள்ளது. ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பயன்படுத்தப்படும் திரைக்கலை நுட்பங்களுள் சிலவற்றை இந்தப் பாடப்பகுதியில் காணலாம்.

கதை

திரைப்படத்திற்குக் கதை எழுத நல்ல கற்பனையும் தெளிவாகக் கதை சொல்லும் திறனும் வேண்டும். திரைப்படத்திற்காக எழுதப்படும் கதைக்கு மூன்று நிலைகள் இருக்கின்றன. முதலாவது, கதையின் சுய வடிவம். அதாவது, ஒரு நாவல், சிறுகதை, நாடகம், புராணக்கதையைத் திரைப்படத்திற்காக எடுத்துக்கொள்வது அல்லது திரைப்படத்திற்காகப் புதிதாகக் கதை எழுதுவது. இரண்டாவது, அந்தக் கதையைத் திரைப்படத்திற்காகப் பண்படுத்துதல், அல்லது மாற்றியமைத்தல். மூன்றாவது, காட்சிகளாகக்கதையை எழுதுவது.

திரைக்கதை

ஒரு கதை என்பது தொடக்கம் முதல் முடிவு வரை பல்வேறு பகுதிகளாக ஒரு தொடர்ச்சியுடன் எழுதப்பட்டதாக இருக்கும். எழுதப்பட்ட கதையை அப்படியே திரைப்படமாகத் தயாரிக்க முடியாது. எனவே, கதையைத் திரைப்படமாகவோ தொலைக்காட்சித் தொடராகவோ தயாரிப்பதற்கு ஏற்பக் காட்சிகளை மாற்றி, படம் விறுவிறுப்பாக அமையும் விதமாக எழுதுவது திரைக்கதை எனப்படும்.

இயக்கம்

கதையை ஒவ்வொரு காட்சியாக எழுதி முடித்த பிறகு, இயக்குநர் அவற்றையெல்லாம் அலசிப்பார்த்துப் படத்திற்கு வேண்டிய மாறுதல்களைச் செய்துகொள்வார். பண்படுத்தப்பட்டுக் கதை வசனங்களுடன் இயக்குநர் அதை எப்படிப் படமாக்குவது, எப்படிக் காட்சிகளாகப் பிரிப்பது என்று திட்டம் போட்டுக்கொள்வார். பின்னர், அந்தக் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்படும்.

ஒளிப்பதிவு

திரைப்படமாக உருவாவதற்குத் தயாராக இருக்கும் கதையானது துண்டுதுண்டான காட்சிகளாக ஒளிப்பதிவு செய்யப்படும். இயக்குநர் தன்னுடைய மனத்தில் இருக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளரின் உதவியுடன் பதிவுசெய்துகொள்வார். காட்சியைப் படம் பிடிப்பதற்கு ஒளி மிகவும் முக்கியம். திரைப்படத்தைப் பொறுத்தவரை இயற்கையான ஒளியில், செயற்கையான ஒளியில் என இரண்டு விதமாக ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன.

ஒலிப்பதிவு

ஒளிப்பதிவின்போது திரைப்படங்கள் பொதுவாக மௌனப் படங்களாகவே பதிவாகின்றன. கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், காட்சிகளுக்குத் தேவைப்படும் இதர ஒலிகளும் பின்னணியில் இணைக்கப்படும். திரைப்படத்தில் ஒளியும் ஒலியும் ஒரு வாக்கியத்தில் இருக்கும் எழுவாயும் பயனிலையும் போன்றது. இதனால் அதற்குப் பலம், அதனால் இதற்குப் பலம்.

படத்தொகுப்பு

ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகள் துண்டுதுண்டாகவும் உதிரிகளான காட்சிகளின் தொகுப்பாகவும் இருக்கும். இதை ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும் பணியே படத்தொகுப்பு ஆகும். வேண்டாத பகுதிகளை நீக்குவது, எந்த வரிசையில் காட்சிகளை அடுக்க வேண்டும் என்பன போன்ற செயல்கள் படத்தொகுப்பில் மேற்கொள்ளப்படும். படத்தொகுப்பாளர் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட எல்லாத் தனித்தனிக் காட்சித் தொகுப்புகளையும் ஒன்றாகத் தொடுத்துத் திரைப்படத்திற்கு முழு உருவம் கொடுப்பார்.

இசை

திரைப்படத்தைப் பொறுத்தவரை இசையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று, பாடல்கள்; இன்னொன்று, பின்னணி இசை. இவை இரண்டும் படத்திற்கு உயிரூட்டுபவையாக இருக்கின்றன. திரைப்படக் காட்சி அமைப்புகளுக்கு ஏற்பப் பின்னணி இசையும் பாடல்களும் இசையமைப்பாளரால் உருவாக்கப்படும். திரைப்படப் பாடல்களைப் பொறுத்தவரை பொதுவாக, ஒவ்வொரு பாட்டிலும் பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் இருக்கும். தற்காலத்தில் இந்த வரையறைகளை உடைத்து, விதவிதமான கட்டமைப்பில் பாடல்கள் உருவாகின்றன.

மேற்குறிப்பிட்டிருக்கும் திரைப்பட நுட்பங்கள் தவிர இன்னும் பல்வேறு கலை நுட்பங்கள் ஒரு திரைப்படம் உருவாவதற்கு உதவுகின்றன. ஊர் கூடித் தேர் இழுப்பதைப் போன்றதுதான் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் பணி எனலாம்.

பொருள் அறிவோம்

1. நுட்பம் - நுணுக்கம்
2. உதிரிகளாக - தனித் தனியாக
3. தொகுப்பு - சேர்த்தல்
4. தொடுத்து - சேர்த்து