சிகரம்
(இரண்டாம் பருவம்)
நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேர்ந்து புணர்வது புணர்ச்சி எனப்படும். இப்பகுதியில் உடம்படுமெய்ப்புணர்ச்சி, குற்றியலுகரப்புணர்ச்சி ஆகியவற்றை மட்டும் விரிவாகக் காண்போம்.
நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் வரும் உயிரெழுத்துகளை இணைக்கும் மெய்யெழுத்துகளே உடம்படுமெய்கள் எனப்படும்.
சான்று:மலை, அருவி = மலை + ய் + அருவி = மலையருவி
இளங்கோ + அடிகள் = இளங்கோ + வ் + அடிகள் = இளங்கோவடிகள்
நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ நின்று, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் யகர உடம்படுமெய் பெற்று வரும்.
| நிலைமொழி | வருமொழி | உடம்படுமெய் தோன்றல் | சொல் |
| மணி | அழகு | மண் + ய் + அழகு | மணியழகு |
| கலை | ஆகும் | கலை + ய் + ஆகும் | கலையாகும் |
நிலைமொழி இறுதியில் அ, ஆ, உ, ஊ, எ, ஒ, ஓ, ஔ நின்று, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் வகர உடம்படுமெய் பெற்று வரும்.
| நிலைமொழி | வருமொழி | உடம்படுமெய் தோன்றல் | சொல் |
| பல | அணி | பல + வ் + அணி | பலவணி |
| பூ | இதழ் | பூ + வ் + இதழ் | பூவிதழ் |
நிலைமொழி இறுதியில் ’ஏ’ என்னும் எழுத்து நின்று, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் யகர, வகர உடம்படுமெய் பெற்று வரும்.
| நிலைமொழி | வருமொழி | உடம்படுமெய் தோன்றல் | சொல் |
| சே | அடி | சே + ய் + அடி | சேயடி |
| சே | அடி | சே + வ் + அடி | சேவடி |
குற்றியலுகரப் புணர்ச்சி நிலைமொழியின் ஈற்றில் குற்றியலுகரச்சொல் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) நிற்க, வருமொழி முதலில் உயிரெழுத்து வருமானால் நிலைமொழி ஈற்றில் உள்ள உகரம் கெட்டு மெய்யீறாய் நிற்கும். அந்த மெய்யீற்றின் மேல் வருமொழியின் முதலில் உள்ள உயிரேறிப் புணரும்.
சான்று: நாடு + ஆகும் = நாடாகும்| வ.எண் | வகை | சான்று |
| 1. | நெடில்தொடர்க் குற்றியலுகரம் | காடு + ஆறு = காட்டாறு |
| 2. | உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் | உலகு + ஆளும் = உலகாளும் |
| 3. | ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் | அஃது + என்ன = அஃதென்ன |
| 4. | வன்தொடர்க் குற்றியலுகரம் | தடுப்பு + அணை = தடுப்பணை |
| 5. | மென்தொடர்க் குற்றியலுகரம் | பஞ்சு + ஆலை = பஞ்சாலை |
| 6. | இடைத்தொடர்க் குற்றியலுகரம் | சால்பு + ஐ = சால்பை |
டு, று என்னும் எழுத்துகளை ஈற்றில் கொண்ட நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக நின்று, வருமொழி முதலில் உயிரோ, மெய்யோ வந்து புணரும்போது, நிலை மொழி ஈற்று ஒற்று இரட்டித்துப் புணரும்.
| வ.எண் | நிலைமொழி + வருமொழி | நிலைமொழி ஈற்று இரட்டித்தல் | புணர்ச்சி |
| 1. | ஆடு + குட்டி | ஆட்டு + குட்டி | ஆட்டுக்குட்டி |
| 2. | ஈறு + எழுத்து | ஈற்று + எழுத்து | ஈற்றெழுத்து |
| 3. | கயிறு + ஏணி | கயிற்று + ஏணி | கயிற்றேணி |
| 4. | முரடு + காளை | முரட்டு + காளை | முரட்டுக்காளை |