சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.2 படிப்போம்

செல்வ நிலையாமை

மனிதர்கள் தமக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்கமுறைகளையே அறம் என்பர். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே‘ அறங்களுள் தலைசிறந்தது. ஆகவே, செல்வம் இருக்கிற காலத்திலேயே அச்செல்வத்தைப் பகிர்ந்தளித்து வாழ வேண்டும் என்ற கருத்தை நாலடியார் பாடல்வழி அறியலாம்.

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

- நாலடியார் (பாடல் – 2)

பாடலின் பொருள்

யாரிடமும் செல்வம் நிலையாக நிற்பதில்லை. வண்டிச்சக்கரம் உருள்வதுபோல மேலும் கீழுமாகச் சுற்றிசுற்றி இடம்மாறிக்கொண்டே போகும் இயல்பைக் கொண்டது அது. அதனால், எருமைகளைக் கொண்டு நெற்போரடித்துப் பெற்ற குற்றமற்ற பெருஞ்செல்வத்தை யாருக்கும் வழங்காமல் பூட்டி வைக்காதீர்கள். அனைவரும் பசியின்றி வாழ அச்செல்வத்தைப் பகிர்ந்து உண்பீர்களாக!

நூலைப் பற்றி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இது நான்கு அடிகளைக் கொண்ட நானூறு வெண்பாக்களால் ஆனது. இதனால், இது ’நாலடி நானூறு’ எனவும் ’வேளாண் வேதம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. ஜி.யு.போப் இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

பொருள் அறிவோம்

1. துகள்நீர் - குற்றமற்ற
2. தோன்றியக்கால் - சேர்ந்த நேரம்
3. பகடு - எருமைக் கடா
4. அகடுற - நிலையாக
5. சகடக்கால் - வண்டிச் சக்கரம்