சிகரம்
(இரண்டாம் பருவம்)
அகம், புறம் என வாழ்க்கையைப் பகுத்து வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை அறம் சார்ந்து அமைத்துக்கொண்டார்கள். போர் முறைகளுக்கும் இலக்கணம் வகுத்திருந்த அவர்கள், அவற்றிலும் அறம் சார்ந்தே செயல்பட்டார்கள். போர்க் காலங்களில் எப்படி அவர்கள் அறத்துடன் செயல்பட்டார்கள் என்பதை இந்தப் பகுதியில் காணலாம்.
ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க நினைக்கும் அரசன் பகை நாட்டு அரசனுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அறிவித்த பின்னரும் அம்மன்னன் பதிலளிக்காமல் இருப்பானாயின் அந்நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்ந்து கொண்டுசெல்வர். இச்செயல்பாடே போரின் தொடக்கமாக அமைந்திருந்தது. போர் தொடங்கும் முன்பாக முரசறைந்து மக்களுக்குத் தெரிவிப்பர்.
போர் நிகழும் காலத்தில் பசுக்கள், வயதானவர்கள், பெண்கள், நோயுற்றோர், குழந்தைப்பேறு இல்லாதோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவர். அதன் பின்பே போர் தொடங்கும்.
காலையில் முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர்புரிவர். பின் முரசறைந்து போரை நிறுத்துவர். போர் எவ்வளவு நாள் நடைபெற்றாலும் இதுவே நடைமுறையாக இருந்துள்ளது. அன்றைய மன்னர்கள், பகைவர்கள் ஆயுதத்தை இழந்தபோதும், போரில் தோற்று ஓடும்போதும் அவர்கள் மேல் படை செலுத்தாமல் அறநெறியைக் காத்தார்கள். பகைவர்களுக்குத் தகுந்த வாய்ப்பளித்து மறுநாள் போர்புரிந்தனர். போரில் இறந்தவர்களுக்கு மனம் இரங்கும் நற்குணத்தைக் கொண்டிருந்தனர்.
ஒருமுறை, சேர நாட்டிலுள்ள கருவூரைச் சோழ மன்னன் கிள்ளிவளவன் முற்றுகையிட்டான். சோழனின் வீரர்கள் தன் நாட்டில் உள்ள காவல் மரங்களை வெட்டுவதையும் பொருட்படுத்தாமல் சேரன் தன் அரண்மனையிலேயே இருந்தான். அதைக் கண்ட புலவர் ஆலத்தூர் கிழார், “போருக்கு வராமல் அரண்மனையில் அடைபட்டுக்கிடக்கும் சேரனோடு போர்புரிவது உன்னைப் போன்ற வீரனுக்கு நாணத்தக்க செயலாகும்” என்று கிள்ளிவளவனிடம் கூறினார். அவ்வாறான சூழலில் சோழன் போரிடாமல் அமைதிகாத்தான். இது போரில் தமிழர்கள் கடைப்பிடித்த அறத்திற்குச் சான்றான ஒரு நிகழ்வாகும்.
பண்டைய தமிழ்ச்சமூகத்தில் போர் தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. அத்தகைய போர்ச்சூழலிலும் தமிழர்கள் அறத்தைப் பின்பற்றினர். வீரமும் வெற்றியும் முதன்மைபெறும் போர்களில்கூட மனிதநேயப்பண்புகள் கடைப்பிடிக்கப்பட்டன என்பதைச் சங்கப்பாடல்கள் வழி அறிய முடிகிறது.
| 1. | பகுத்தல் | - | வகைப்படுத்தல் | ||
| 2. | கவர்தல் | - | பிடித்து வருதல் | ||
| 3. | முரசறைதல் | - | முரசு கொட்டுதல் | ||
| 4. | முற்றுகை | - | சுற்றி வளைத்தல் | ||
| 5. | நாணம் | - | வெட்கம் | ||
| 6. | தவிர்க்க இயலாத | - | தடுக்க முடியாத |