சிகரம்
(இரண்டாம் பருவம்)
உலகம் செயல்களால் நிரம்பியது. செயல்களை வினை என்று இலக்கணம் கூறுகிறது. இந்த வினைகளைக் கொண்டு தொடர்களை அமைக்கிறோம். அவ்வினைவகைத் தொடர் எட்டு வகைப்படும். அவையாவன:
| 1. உடன்பாட்டு வினைத் தொடர் 3. செய்வினைத் தொடர் 5. தன்வினைத் தொடர் 7. நேர்க்கூற்றுத் தொடர் |
2. எதிர்மறை வினைத் தொடர் 4. செயப்பாட்டுவினைத் தொடர் 6. பிறவினைத் தொடர் 8. அயற்கூற்றுத் தொடர் |
இப்பாடப்பகுதியில் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களைக் காண்போம்.
எழுவாய், தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினைத் தொடர் எனப்படும்.
சான்று : கயல்விழி கற்றாள், வளவன் உண்டான்.
எழுவாய் தானே செய்யாமல், அதேசமயம் அச்செயல் நடைபெறக் காரணமாக இருப்பதை உணர்த்துவது பிறவினைத் தொடர் எனப்படும்.
சான்று : கயல்விழி கற்பித்தாள், தாய் ஊட்டினாள்.
| தன்வினை | பிறவினை |
| பாண்டியன் பாடம் படித்தான் | பாண்டியன் பாடம் படிப்பித்தான் |
| கனிமொழி உணவு உண்டாள் | கனிமொழி உணவு உண்பித்தாள் |
| பொன்மணி மலர் சூடினாள் | பொன்மணி மலர் சூட்டினாள் |
| ஆசிரியர் பாடம் கற்றார் | ஆசிரியர் பாடம் கற்பித்தார் |
செய்பவனுக்கு முதன்மை அளிக்கும் வினை செய்வினை, எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினைத் தொடர் எனப்படும்.
சான்று : இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
பூங்குழலி இட்டலி அவித்தாள்.
செயப்படு பொருளுக்கு முதன்மை அளிக்கும் வினை செயப்பாட்டுவினை. செயப்படுபொருளை எழுவாயாகப் பெற்றும், எழுவாய் மூன்றாம் வேற்றுமை உருபைப் பெற்றும், பயனிலை ’படு’ என்பதைப் பெற்றும் வருகின்ற தொடர் செயப்பாட்டுவினைத் தொடர் எனப்படும்.
சான்று : சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.
இட்டலி பூங்குழலியால் அவிக்கப்பட்டது.
| செய்வினை | செயப்பாட்டுவினை |
| கம்பர் இராமாயணத்தை இயற்றினார். | இராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது. |
| ஆசிரியர் மாணாக்கர்களை உருவாக்கினார். | மாணாக்கர்கள் ஆசிரியரால் உருவாக்கப்பட்டனர். |
| முதலமைச்சர் திட்டங்களைத் தொடங்கினார். | திட்டங்கள் முதலமைச்சரால் தொடங்கப்பட்டன. |
| கவிஞர் நூலை வெளியிட்டார். | நூல் கவிஞரால் வெளியிடப்பட்டது. |
| வேடன் வலை விரித்தான். | வலை வேடனால் விரிக்கப்பட்டது. |