சிகரம்
(இரண்டாம் பருவம்)
உரிய காலத்தில் பிறரின் தேவையறிந்து உதவுதலே சிறந்த அறம். எனவேதான் ஔவையாரும் ‘அறம் செய விரும்பு‘ என்கிறார். வெற்றியழகனின் இக்கவிதை பிறர் உயிரைக் காக்க, இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கும் அறத்தை வலியுறுத்துகிறது.
இறைக்கின்ற கிணற்றில்நீர் சுரப்ப தைப்போல்
இரத்தத்தைக் கொடுப்பதனாற் குருதி ஊறும்!
அரைக்கின்ற சந்தனந்தான் மணப்ப தைப்போல்
அளிப்பதனாற் குருதியது தூய்மை யாகும்!
தருகின்ற குருதியதே உயிரைக் காக்கும்
தன்னுடலுக்கு ஊறேதும் நேர்ந்தி டாது!
குருதிக்கொடை ஒன்றேதான் கொடையுள் மேலாம்!
குவலயத்துள் இதுபோன்ற கொடையொன் றில்லை!
- வெற்றியழகன்
இறைக்க இறைக்கக் கிணற்றில் நீர் ஊறும். அதுபோல, நம் உடலிலுள்ள குருதியைக் கொடையாக அளிக்க அளிக்க அது மேன்மேலும் ஊறும்.
சந்தனக்கட்டை அரைக்க அரைக்க மணம் பரப்பும். குருதி உடலிலிருந்து நீங்க நீங்கப் புதுக் குருதி ஊறுவதால் உடல் தூய்மையாகும்.
கொடையாகக் கொடுக்கப்படும் குருதி பிறர் உயிரைக் காக்கப் பயன்படும். குருதியினை வழங்குவதால் எத்தகைய துன்பமும் வழங்குவோருக்கு நேராது.
குருதிக்கொடை ஒன்றுதான் பிற கொடைகளைவிடச் சிறந்ததாகும். உலகில் இதுபோன்று பிறிதொரு கொடையில்லை.
கவிஞர் வெற்றியழகனின் இக்கவிதை ‘குருதிக்கொடை‘ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. வெற்றியழகனின் இயற்பெயர் ஜெயராமுலு. ’அறிவார்ந்த கதைகள்’, வெற்றியழகன் கவிதைகள் (மூன்று தொகுதிகள்), ’வெண்ணிலா’ போன்ற நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது பெற்றவர். இவர்தம் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
| 1. | குருதி | - | இரத்தம் | ||
| 2. | ஊறு | - | துன்பம் | ||
| 3. | குவலயம் | - | உலகம் | ||
| 4. | கொடை | - | கொடுப்பது |