சிகரம்
(இரண்டாம் பருவம்)
பிறரிடம் பகிர்ந்துகொள்வதே வாழ்வு, தனக்கு மட்டுமே வேண்டும் என்று எந்த உயிரும் வாழ்வதில்லை. பூக்கள் மணத்தை வெளியிட மறுத்து இதழ்களை மூடி வைத்துக்கொள்வதில்லை. மரம் தனக்கே என்று பழங்களைக் கிளைகளில் தக்க வைத்துக்கொள்வதில்லை. பிறருக்குத் தந்து மகிழ்வதே சிறந்த அறம். இக்கருத்தை வெ.இறையன்பு இ.ஆ.ப எழுதிய ‘வாழ்க்கையே ஒரு வழிபாடு’ என்ற நூல் பதிவுசெய்கிறது. இந்நூலில் உள்ள அறம் சார்ந்த கருத்துகளை இப்பாடப் பகுதியில் காண்போம்.
பிறருடன் தன்னிடமிருப்பதைப் பகிர்ந்துகொள்ளும்போது பொருள் குறைந்தாலும் மகிழ்ச்சி கூடும். ‘செல்வம் பிறருக்குப் பங்களிப்பதற்கே’ என்ற அடிப்படையில்தான் ’பேரறிவுடையவன் செல்வம், ஊர்க்குளம் நீரால் நிறைந்தது போன்றது’ என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். தருவது என்றால் பொருள்களை மட்டுமல்ல; அன்பை, இதயத்தை, நல்லெண்ணத்தைக் கொடுப்பதும் ஈகையே. கொடுக்கிறோம் என்கிற உணர்வின்றிக் கொடுப்பதே நல்ல தானம்.
சிலருக்கு எதையும் கொடுக்கவே மனம் வராது. அவர்கள் குப்பையைக்கூட வைத்துப் பாதுகாப்பார்கள். பொருளே அழுகினாலும் பிறருக்குத் தர மாட்டார்கள். அவர்கள் பெறுவதை மட்டுமே அறிவார்கள். யார் எதைத் தருவார்கள் என்பதிலேயே அவர்களின் கவனம் இருக்கும். அவர்களின் கைகள் மட்டுமல்ல, அவர்களும் தாழ்ந்தே இருப்பார்கள்.
சிலர் தருவார்கள்; தருகின்ற நிலையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருப்பார்கள். அவர்கள் யார் எதைத் தந்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட பெரும்போக்கே அவர்களின் கொடை உள்ளத்தைக் களங்கப்படுத்திவிடும்.
எனக்குத் தெரிந்தவர் ஒருவர். எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பார். அவரிடம் வேலைசெய்யும் சிலர் அன்புடன் சில வாழைப்பழங்களைத் தந்தாலும் வாங்கிக்கொள்வார். அவரிடம் வாழைத்தோட்டமே உண்டு. உயர்ந்த வகைப் பழங்கள் நிறைய இருந்தாலும் அவர்கள் அளித்த பழங்களை மனம் மகிழ்ந்து சாப்பிடுவார். அவரிடம் கேட்டதற்கு, “நாமும் வாங்கிக்கொண்டால்தான் அவர்களுக்கு நாம் எதையாவது தரும்போது அதை அவர்கள் பிச்சை என்று கருத மாட்டார்கள்” என்றார்.
முதல் நாள் தாம் முன்கூட்டியே வணக்கம் வைத்தால், அடுத்த நாள் அவர்கள் முன்கூட்டியே வணக்கம் வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எப்போதுமே கடன் வாங்கிக் கழிப்பவர்கள். ஒருசிலரே தருவார்கள்; தருகிற எண்ணமின்றித் தக்க நேரத்தில் பெறுவார்கள்; தருவதும் பெறுவதும் அவர்களுக்குப் பெரிய சம்பவங்களல்ல.
கொடுக்கும்போது வாங்குபவர்களின் கண்களில் நன்றி தெரிய வேண்டும் என்றுகூட எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களே சிறந்த வள்ளல்கள். பெற்றுக்கொண்டவர்களிடம் நன்றியுடன் இருப்பவர்களே மகான்களாக மலர முடியும். ரிசட்ஸீ என்கிற துறவியிடம் மடாலயத்தை விரிவுபடுத்தும் பொருட்டு உமேசு என்கிற வியாபாரி 500 தங்கக் கட்டிகளைக் கொண்டுவந்து கொடுத்தார். உடனே ரிசட்ஸீ, “சரி! எடுத்துக்கொள்கிறேன்” என்றார். இப்படிப் பதில் சொல்கிறாரே குரு என உமேசு எண்ணினார். மூன்று தங்கத் துண்டுகளில் ஒரு வருடத்திற்கான செலவை ஒருவர் செய்ய முடியும். ஆனால், 500 தங்கத் துண்டுகளைப் பெற்றுக்கொண்டு ஒரு நன்றிகூடச் சொல்லவில்லையே என நினைத்தார். “இந்த மூட்டையில் 500 தங்கத் துண்டுகள் இருக்கின்றன” என்றார். “அதைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டீர்களே” என்றார் ரிசட்ஸீ. “நான் பணக்காரராக இருந்தபோதிலும், எனக்கே இது பெரிய தொகை” என்றார் உமேசு.
“நான் நன்றி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறாயா? தருபவர்கள்தான் நன்றியுடன் இருக்க வேண்டும்” என்றார். நல்ல செயலுக்கு நாமும் உதவ முடிந்தால் நாம்தான் நன்றி சொல்ல வேண்டும். பொருள்களை மட்டுமல்ல; அன்பைத் தரலாம், அரவணைப்பைத் தரலாம், வித்தையைத் தரலாம்; தன்னிடம் இருப்பவற்றில் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவற்றைத் தருவதே சிறந்த அறமாகும். யார் பெறுகிறார்கள் என்பது தெரியாமல் தருவதே உயர்ந்த கொடை. ஏனென்றால், அங்கே திரும்பப் பெறுகிற எண்ணம் துளியும் இல்லை. அதனால்தான் கண் தானமும் இரத்த தானமும் உயர்வாகப் பேசப்படுகின்றன.
பைபிளில் ‘வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எப்போதுமே வேண்டாததைக் கொடுக்கிறோம். போகித் திருநாள் வரும்போது பலர் வள்ளல்களாகிவிடுகிறார்கள். மிகுதியாக இருப்பதைக் கொடுத்து உதவுகிறோம்.
நம்மிடம் உள்ளனவற்றில் எது உபயோகம் என்பதை யார் தீர்மானிப்பது? சங்-சூ தன் சீடனுடன் செல்லும்போது வயதான ஒரு மரத்தைப் பார்த்த சீடன், “எப்படி இவ்வளவு ஆண்டுகள் இது வெட்டப்படாமல் இருக்கிறது?” என்றான். சங்-சூ, “இம்மரம் வளைந்தும் முடிச்சுகளோடும் இருக்கிறது. எந்த மரச்சாமானும் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் இவ்வளவு ஆயுள்” என்றார். அன்று மாலை நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றனர். நண்பர் சொன்னார், “என்னிடம் இரு வாத்துகள் இருக்கின்றன. ஒன்று, அந்நியர் வந்தால் எச்சரித்துக் கத்தும். மற்றொன்று, சும்மா இருக்கும்.” பயனில்லாத வாத்தை உங்களுக்கு உணவாகச் சமைக்கிறேன் என்றார். திரும்பி வரும்போது சீடன், “பயனில்லாத மரம் வாழ்கிறது. பயனில்லாத வாத்து வெட்டப்படுகிறது. எனவே, பயனுடன் இருப்பது சிறந்ததா, பயனின்றி வாழ்வது சிறந்ததா?” என்றான்.
சங்-சூ சொன்னார்: “வாழ்வின் பொருள், எப்போது பயனற்று இருக்க வேண்டும் அல்லது எப்போது பயனுடன் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.” அதைப் போலவே நாம் எப்போது தருவது, எப்போது பெறுவது என்பதைச் சரியாகத் தீர்மானிப்பதே நுண்ணறிவு. எனவே, நிலையற்ற இவ்வாழ்வில் அறத்துடன் வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.
| 1. | பகிர்தல் | - | பங்கிட்டுக் கொள்ளுதல் | ||
| 2. | ஈகை | - | கொடை | ||
| 3. | களங்கம் | - | குற்றம் |