சிகரம்
(இரண்டாம்பருவம்)

பாடம் - 24
24.4 தெரிந்துகொள்வோம்

யாப்பிலக்கணம் (எழுத்து, அசை, சீர்)

இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியங்களை ஆக்கப் பயன்படும் செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பல விதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. இவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும், ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்கள், அவற்றின் வகைகள் மற்றும் இனங்கள் பற்றியும் அறிவதே யாப்பு இலக்கணம் ஆகும்.

அசை

எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.

குறில் எழுத்து
கல் குறில் + மெய் எழுத்து
கா நெடில் எழுத்து
கால் நெடில் + மெய் எழுத்து

இரண்டு குறில்கள் இணைந்து வருவதும், ஒரு குறிலோடு ஒரு நெடில் இணைந்து வருவதும், இவற்றுக்குப் பின் மெய்யெழுத்து வருவதும் நிரையசை ஆகும்.

கிளி இரண்டு குறில் எழுத்துகள்
மயில் இரண்டு குறில் + மெய் எழுத்து
புறா குறில் நெடில் எழுத்துகள்
இறால் குறில் நெடில் + மெய் எழுத்து

மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும்.

சீர்

அசைகள் இணைந்து வருவது சீர்ஆகும். ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறு அமையும்

ஓர் அசைச் சீர்

ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.

க, கல், கா, கால் நேர் அசை
கடு, கடல், பலா, வரால் நிரை அசை

ஈர் அசைச் சீர்

இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர் ஆகும்.

1) நேர் நேர்  2) நிரைநேர்  3) நிரை நிரை  4) நேர் நிரை

மூவசைச் சீர்

மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர்ஆகும்.

நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.

நேரசையில் முடியும் சீர்கள்
நேர் நேர் நேர்
நிரை நேர் நேர்
நேர் நிரை நேர்
நிரை நிரை நேர்
நிரை அசையில் முடியும் சீர்கள்
நேர் நேர் நிரை
நிரை நேர் நிரை
நேர் நிரை நிரை
நிரை நிரை நிரை

நாலசைச் சீர்

நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர் எனப்படும். நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும், நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.

சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது. சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்: ஓரசைச் சீர்களில் நேர் அசை வரும் சீர் நாள் என்றும், நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.

ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.

மாச்சீர்

நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா

விளச்சீர்

நேர் நிரை கூவிளம்
நிரை நிரை கருவிளம்

நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரை ஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர்.

மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்ட வாய்பாடுகளுடன் இறுதியில் காய் என்பதும் நிரை ஈற்றுச் சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும்.

காய்ச்சீர்

நேர் நேர் நேர் தேமாங்காய்
நிரை நேர் நேர் புளிமாங்காய்
நேர் நிரை நேர் கூவிளங்காய்
நிரை நிரை நேர் கருவிளங்காய்

கனிச்சீர்

நேர் நேர் நிரை தேமாங்கனி
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி
நிரை நிரை நிரை கருவிளங்கனி

சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது.