சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.4 தெரிந்துகொள்வோம்

யாப்பின் உறுப்புகள் (தளை, அடி, தொடை)

தளை என்பதற்குப் பிணைத்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். முதற்சீரின் கடைசி அசையும் அடுத்த சீரின் முதல் அசையும் சேருதல் தளை. ஓர் அடியில் நான்கு சீர் இருந்தால், இவற்றுக்கு இடையே மூன்று தளைகள் தோன்றும்.

தளை வகைகள்

தளைகள் ஏழு வகைப்படும். அவை,

1. நேர் ஒன்றாசிரியத்தளை ஆசிரியப்பாவிற்கு உரியன.
2. நிரை ஒன்றாசிரியத்தளை ஆசிரியப்பாவிற்கு உரியன.
3. இயற்சீர் வெண்டளை வெண்பாவிற்கு உரியன.
4. வெண்சீர் வெண்டளை வெண்பாவிற்கு உரியன.
5. கலித்தளை கலிப்பாவிற்கு உரியது.
6. ஒன்றிய வஞ்சித்தளை வஞ்சிப்பாவிற்கு உரியன.
7. ஒன்றாத வஞ்சித்தளை வஞ்சிப்பாவிற்கு உரியன.

அடி

இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது அடி எனப்படும். இது ஐந்து வகைப்படும்.

வ.எண். அடி அடி இலக்கணம்
1. குறளடி இரண்டு சீர்களைக் கொண்டது
2. சிந்தடி மூன்று சீர்களைக் கொண்டது
3. அளவடி நான்கு சீர்களைக் கொண்டது
4. நெடிலடி ஐந்து சீர்களைக் கொண்டது
5. கழிநெடிலடி ஆறும் அதற்கு மேற்பட்ட சீர்களையும் கொண்டது

தொடை

செய்யுள்களின் சீர்களும் அடிகளும் தொடுத்துச்செல்கிற முறையுடன் தொடர்புபட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகிறது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும் அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை. தொடைகள் எட்டு வகைப்படும். அவை,

1. மோனைத் தொடை
3. இயைபுத் தொடை
5. அளபெடைத் தொடை
7. இரட்டைத் தொடை
2. எதுகைத் தொடை
4. முரண் தொடை
6. அந்தாதித் தொடை
8. செந்தொடை

என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் தொடர்புடையவை. அடிகளின் இறுதிச் சீருடன் தொடர்புடையது இயைபுத் தொடை ஆகும்.

யாப்பிலக்கண நூல்கள்

இதுவரை கிடைத்துள்ள தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய தொல்காப்பியத்திலேயே யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுதப்பட்ட நூல் யாப்பருங்கலக் காரிகை. இதன் ஆசிரியர் அமிர்தசாகரர்.