சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.3 படிப்போம்

தமிழர் மருத்துவம்

தமிழர்கள் நோயின்றி வாழ்வதற்கான வழிமுறைகளைத் தங்கள் அன்றாட வாழ்க்கை முறைகளுடனேயே கடைப்பிடித்தனர். அதை நம் இலக்கியங்களும் ஓலைச்சுவடி முதலான ஆவணங்களும் எடுத்துரைக்கின்றன.

பழந்தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துவந்த மருத்துவம் ’தமிழ் மருத்துவம்’ என்றே அழைக்கப்பெற்றது. ’உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்னும் திருமூலரின் கூற்று தமிழர்கள் உடல்நலத்திற்கு அளித்துவந்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மருத்துவன் தாமோதரன், மருத்துவன் நல்லச்சுதன் போன்ற புலவர்களின் பெயர்களைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. மருத்துவமனைகளை ’ஆதூரசாலை’ என்று அழைத்ததையும், ’சல்லியக்கிரியை’ என்ற பெயரால் அறுவைச் சிகிச்சை நடைபெற்றதையும் சோழர்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ’திருந்திய யாக்கையும் மருத்துவர் ஊட்டிய மருந்துபோல’ என்ற அடிகள் கலித்தொகையிலும், ’மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்’ என்ற அடி மூதுரையிலும் மருந்து பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.

ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அவற்றின் பெயரிலேயே மருத்துவத்தைத் தாங்கியுள்ளன. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு சேர்ந்த சூரணம் நோயைத் தீர்ப்பதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்கள் பற்றிய கருத்துகளை முன்வைத்து அறிவுரை சொல்வதுபோல் அமைந்த நூல் ஏலாதி ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றும் உடலில் உள்ள நோயைத் தீர்ப்பதுபோல வாழ்க்கைக்குத் தேவையான நல்ல செய்திகளை, பாடலுக்கு மூன்றாகக் கூறும் நூல் திரிகடுகம். சிறுமல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, கண்டங்கத்திரி, நெருஞ்சி ஆகிய ஐந்து வேர்கள் எவ்வாறு நோயைப் போக்குகின்றனவோ அதுபோல் படிப்போர் உள்ளத்தில் உள்ள அறியாமையை ஐந்து கருத்துகளால் போக்கும் நூல் சிறுபஞ்சமூலம். இவற்றை வைத்துப் பார்க்கும்போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்துறையில் தமிழர்கள் பெற்றிருந்த அறிவையும் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிகிறது.

திருவள்ளுவர் மருத்துவத்திற்கென்றே தனி அதிகாரம் படைத்துள்ளார். நோயற்ற மக்களைக் கொண்ட நாடே உலகில் சிறந்த நாடாகத் திகழமுடியும் என்பதை,

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (724)

என்னும் குறளில் குறிப்பிடுகிறார். மேலும்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (942)

என்ற குறளில் உணவே அருமருந்து என்பதை நிறுவுகிறார்.

அந்நாளில் போர்க்களங்களில் காயம் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து மருத்துவம் செய்தனர். அவ்வாறு செய்வதற்குப் பயன்பட்ட பல வகையான மருந்துகள், அறுவை சிகிச்சை செய்வதற்குப் பயன்பட்ட பொருள்கள் போன்றவை இலக்கியங்களிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 600 வகையான மருந்துகளும் 100 வகையான அறுவை மருத்துவ ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. தமிழரின் மருத்துவத்தில் ’வெல்லூசி’ எனும் ஊசி பயன்பட்டதைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அது மட்டுமன்றி மருத்துவர் எவ்வாறு இருந்தார் என்பதை,

அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கெடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் (நற்.136)

என்னும் நற்றினை அடிகள் எடுத்துரைக்கின்றன. அதாவது, மருத்துவர் நோயின் தன்மையைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தை ஆய்ந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மருந்தை ஆய்ந்து கொடுப்பவர் ’அறவோன்’ என்று அழைக்கப்பட்டார்.

மருத்துவம் பற்றிய புரிதலிலும் உடற்கூறு குறித்த அறிவிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், தமிழர்கள் தமக்கென மரபு சார்ந்த முறைகளை உருவாக்கிப் பின்பற்றினர். இயற்கையோடு இணைந்ததாகப் பழந்தமிழரின் மருத்துவ முறை இருந்தது. அவர்கள் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர்.

உடல்நலனுக்குத் தமிழர்கள் முதன்மையான இடம் அளித்திருந்தனர் என்பதை மேற்கண்ட குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

பொருள் அறிவோம்

1. கூற்று - சொல்லுதல்
2. ஆதூரசாலை - மருத்துவமனை
3. பிணி - நோய்
4. ஆய்ந்து - ஆராய்ந்து
5. திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்து.