சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.2 படிப்போம்

ஆசாரக்கோவை

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‘ என்பது சான்றோர் வாக்கு. உடல் நலம்தான் அனைத்துச் செல்வங்களையும்விட உயர்ந்த செல்வமாகும். மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும் உடல்நலம் மிக அவசியம். உண்ணும் முறையால் உடல்நலம் சிறக்கும் என்பதை ஆசாரக்கோவை தெளிவுபடுத்துகிறது.

கிடந்துண்ணார்; நின்றுண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிகவுண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்தொன்றும் தின்னற்க நின்று. (பாடல் – 23)

கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க, முறைவகையால் ஊண். (பாடம் – 25)

- பெருவாயின் முள்ளியார்

பாடலின் பொருள்

1. படுத்துக்கொண்டும் நின்றுகொண்டும் திறந்தவெளியிலும் உணவு உண்ணக் கூடாது. நன்றாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் கூடாது. கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக் கூடாது. நெறிமுறை இல்லாமல் எந்தவொரு உணவுப்பொருளையும் நின்றுகொண்டு உண்ணுதலும் கூடாது.

2. உண்ணும்போது இனிப்பான உணவை முதலில் உண்ண வேண்டும். கசப்பான உணவை இறுதியில் உண்ண வேண்டும். மற்ற சுவையுடைய உணவை இடையில் உண்ணவேண்டும்.

நூலைப் பற்றி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. ஆசாரம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஒழுக்க நெறிமுறைகளைக் கோவையாகச் சொல்வதால் இப்பெயர் பெற்றது. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.

பொருள் அறிவோம்

1. கிடந்து - படுத்து
2. வெள்ளிடை - திறந்தவெளி
3. இறந்து - நெறிமுறை இல்லாமல்
4. தின் - உண்
5. கைப்பு - கசப்பு
6. கடை - இறுதி
7. தலை - முதல்
8. தித்திப்பு - இனிப்பு
9. துய்க்க - உண்க