சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.6 கேட்டல் கருத்தறிதல்

டாக்டர் வை. கிருஷ்ணமூர்த்தி
(1929 - 2002)

இப்புவி மனிதர்களுக்கானது மட்டுமன்று; தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமானது. இவ்வாறு பிற உயிரினங்களின் நலத்தைப் பேணுவதற்காகத் தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டவர்கள் பலர். அவர்களுள் ‘யானை டாக்டர்’ என அழைக்கப்படும் டாக்டர் வை. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். இவரை டாக்டர் கே என்று அழைப்பர்.

இவர் தமிழ்நாட்டின் முக்கியமான வனவியல் வல்லுநர்களில் ஒருவர். யானைகளுக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான 'வேணுமேனன் ஏலீஸ்' விருதினை (Venu Menon Allies Award) 2000ஆம் ஆண்டில் பெற்றார். தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின் மூலம் செயல்படுத்தியவர்.

“உண்மையில், இருப்பதிலேயே மிகவும் பலவீனமான மிருகம் மனிதன்தான். மற்ற மிருகங்களெல்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கொள்வதில் இருக்கும் கம்பீரத்தைப் பார்த்தால் கண்களில் தண்ணீர் வந்துவிடும். உயிர்போகிற வலி இருந்தாலும் யானை அலறாது, துடிக்காது; கண் மட்டும் நன்றாகச் சுருங்கியிருக்கும். உடல் ஆங்காங்கே அதிரும். யானை சம்மதித்தால் அதற்கு மயக்க மருந்தே தராமலே அறுவை சிகிச்சை செய்துவிடலாம். அந்த அளவுக்குப் பொறுமையாக நிற்கும். என்னே, ஓர் உயிரினம்! கடவுள் தன்னுடைய நல்ல படைப்பு மனநிலையில் யானையை உருவாக்கியிருக்கிறார்” என்று யானைகளின் இயல்பு குறித்து டாக்டர் கே குறிப்பிடுகிறார்.

வினாக்கள்

புவி மனிதர்களுக்கு மட்டுமன்றி தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமானது.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை டாக்டர் கே என்று அழைப்பர்.

உண்மையில் மனிதனே பலவீனமான மிருகம். மற்ற மிருகங்களெல்லாம் நோயையும், வலியையும் பொறுத்துக்கொள்ளும் என டாக்டர் கே. குறிப்பிடுகிறார்.

வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலிஸ் விருதினை (venu menon Alies Award) 2000 ஆம் ஆண்டில் பெற்றார்.

வனப்புத்துணர்ச்சித் திட்டம்.

தகவல் துளி

யோகா

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 பன்னாட்டு யோகா நாளாகக் கொண்டாடப்படுகிறது. யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நல்வாழ்விற்கான பழக்கமுறைகளில் இன்றியமையாத ஒன்றாகும். நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் தங்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. யோகாவை அப்பாடல் கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது. மனிதரின் உடல் நலத்தையும் உள நலத்தையும் ஒருசேரப் பேணுவதற்குப் பயன்படும் கலை இது.