சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.2 படிப்போம்

புறநானூறு

கடையெழு வள்ளல்களுள் ஒருவர் ஓரி. இவர் கொல்லிமலையை ஆட்சி செய்தவர். வில்வித்தையில் சிறந்தவராதலால் ‘வல்வில் ஓரி’ என்று அழைக்கப்படுகிறார். கபிலர், கல்லாடனார், நல்லூர் நத்தத்தனார். பரணர், வன்பரணர், பெருஞ்சித்திரனார், கழைதின் யானையார் ஆகிய புலவர்கள் இவரது ஆளுமைத்திறனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். புலவர் வன்பரணர் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று ஓரியின் வீரத்தை வெளிப்படுத்தும் பாங்கை இந்தப் பகுதியில் காண்போம்.

“வேழம் வீழ்த்த விழுந் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன்;
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ”

(புறநானூறு : 152 – பாடல் வரிகள் : 1-12)

பாடலின் பொருள்

கொல்லிமலைக் காட்டில் வன்பரணர் தம் சுற்றத்தவர்களுடன் பயணித்தார். அங்கே வேடன் ஒருவன் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அந்த வேடன் எய்த அம்பு யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று மான் ஒன்றை உருட்டித் தள்ளி, பன்றியின் உடலைத் துளைத்துச் சென்று, உடும்பின் உடலில் தைத்து நின்றது. வேடனின் இத்தகைய வில் ஆற்றலைக் கண்டு வன்பரணர் வியந்து நின்றார். இந்த வேடன் யாரோ? அவ்வேடனைக் கண்டால் கொலைத் தொழில் புரிபவன்போல் தோன்றவில்லை; ஒரு மன்னனைப் போல இருக்கின்றான். முத்துமாலை தவழும் அகன்ற மார்பை உடைய இவரைக் கண்டால், அருவிகள் வீழும் வளமான மலைக்குத் தலைவனாகிய ஓரியைப் போல உள்ளது என வன்பரணர் கூறுகின்றார்.

அவ்வேடன், வல்வில் ஓரிதான் என்று வன்பரணரும் அவரது சுற்றத்தாரும் அறிந்தனர். அதன் பின்னர், ஓரியைப் பாடல்கள் பாடியும் கருவிகளை இசைத்தும் ஓரியை வாழ்த்தி மகிழ்ந்தனர். வன்பரணர் இவ்வாறு புறநானூற்றில் பாடியுள்ளார்.

நூலைப் பற்றி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. புறம் + நான்கு + நூறு – புறநானூறு. இது புறப்பொருள் பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. இது தமிழர்களின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது. இந்நூல் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டது. வன்பரணர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நற்றிணையில் ஒரு பாடலும் புறநானூற்றில் 7 பாடல்களும் பாடியுள்ளார். கோப்பெருநள்ளியும் வல்வில் ஓரியும் இவரது காலத்தைச் சார்ந்த அரசர்கள்.

பொருள் அறிவோம்

1. ஆரம் - மாலை
2. ஆழல் - ஆழம்
3. உழுவை - புலி
4. கலை - ஆண்மான்
5. கேழற்பன்றி - ஆண்பன்றி
6. திளைத்தல் - மகிழ்தல்
7. பகழி - அம்பு
8. புகர் - புள்ளி
9. பேழ் - பெரிய
10. விழு - சிறந்த