சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.3 படிப்போம்

இராஜேந்திர சோழன்

புகழ்பெற்ற சோழ மன்னர்களுள் ஒருவர் இராஜேந்திர சோழன். இவரது தந்தை இராஜராஜ சோழன், தாய் வானவன் மாதேவி. இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் மதுராந்தகன். கி.பி 1012இல் இளவரசு பட்டம் ஏற்றார். தம் தந்தை இராஜராஜனின் மறைவுக்குப் பின் 1014இல் மன்னராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சிக்காலம் சோழப்பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. சோழ மன்னர்களுள் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசின் பரப்பைக் கடல்கடந்து விரிவுபடுத்தினார். அயல்நாட்டிற்குப் பெரும்படை எடுத்துச்சென்ற முதல் தமிழ் மன்னர் இவரே.

இவரின் முதல் போர், கிருஷ்ணா – துங்கபத்திரை ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நடைபெற்றது. இப்போரில் வென்று இடைத்துறை நாட்டைத் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார். இன்று குல்பர்க்கா என்று அழைக்கப்படும் கொள்ளிப்பாக்கையே இவரது இரண்டாம் வெற்றி. 1017இல் இலங்கைப் போரில் வெற்றிபெற்றார்.

1023இல் இவர் மேற்கொண்ட கங்கைப் படையெடுப்பு இவரது மிகப்பெரிய படையெடுப்பாகும். இப்போரில் வெற்றிபெற்றதால் கங்கைகொண்டான் என அழைக்கப்பட்டார். சிந்துப் பகுதியையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தினார். ராஜேந்திரனின் கடல் கடந்த வெற்றிகளில் மிக முக்கியமானது கடாதத்தை வெற்றிகொண்டது. கடாரம் என்பது மலேசியாவில் இருக்கும் பகுதியாகும். இவ்வெற்றியைத் தொடர்ந்து கடாரம் கொண்டான் என்று சிறப்பிக்கப்பட்டார். பின்னர் சுமத்ரா, நிக்கோபார்த் தீவுகளும் சோழர் வசம் வந்தன.

வங்காள தேசத்தைச் சோழ நாட்டுடன் இணைத்தார். அந்த வெற்றியைச் சிறப்பிக்கவே ’கங்கைகொண்ட சோழபுரம்’ என்னும் நகரத்தை உருவாக்கினார். தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட சோழ அரச மரபை மாற்றி, தானே உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டது, அவரது தனித்துவத்தை வெளிப்படுத்தியது.

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட பெரும்படை ஒன்றை வைத்திருந்தார். இப்படை நாட்டின் எல்லையைக் காக்கவும் அயல்நாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. இராஜேந்திரனிடம் சிறந்த கடற்படையும் இருந்தது. இதன் உதவியால் மலேய தீபகற்பம், கீழைக் கடற்கரைப் பகுதிகள் வரை தம் நாட்டை விரிவுபடுத்தினார். மேலும், கிழக்கிந்தியத் தீவுகளுடன் ஏற்பட்ட வணிகத்தைப் பாதுகாக்கவும் முடிந்தது. இவ்வாறு இராஜேந்திர சோழன் தம் நாட்டைத் தலைசிறந்த நாடாக மாற்றினார்.

இராஜேந்திர சோழன் உழவுத் தொழிலே ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதை அறிந்து உழவர் நலன் காத்திட வழிவகுத்துள்ளார். உழவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலிமை மிக்க குழு ஒன்றை உருவாக்கினார். தந்தையைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த பட்டங்கள் பலவற்றைப் பெற்றார். முடிகொண்ட சோழன், பண்டிதச் சோழன் என்பன இவர் பெற்ற பட்டங்களுள் குறிப்பிடத்தக்கன. கங்கைகொண்ட சோழன் என்ற பட்டத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார். கடல்கடந்தும் தமிழர்தம் பெருமையை நிலைநாட்டினார் இராஜேந்திர சோழன்.

பொருள் அறிவோம்

1. உட்படுத்தல் - உள்ளாக்குதல்
2. வசம் - ஆட்சிப்பொறுப்பு
3. இணைத்தல் - சேர்த்தல்
4. வலிமை - பலம்