சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.4 தெரிந்துகொள்வோம்

அணியிலக்கணம்

நாம் நம்மை அணிகலன்களால் அலங்கரித்துக்கொள்வதைப் போல் கவிஞர்கள் தாம் இயற்றிய செய்யுள்களை அழகுபடுத்துவது அணியாகும். அத்தகைய அணிகள் சிலவற்றைக் காணலாம்.

நிரல்நிறை அணி

சொற்கள் அமைந்திருக்கும் அதே வரிசை முறையில் பொருள்களையும் வரிசைப்படுத்திப் பொருள்கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

எ.கா:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.(குறள்: 45)

இக்குறட்பாவில் அன்பு, அறன் ஆகிய சொற்களை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் ஆகியவற்றை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆயிற்று.

நிரல் நிறுத்து இயற்றுதல் நிரல்நிறை அணியே (தண்டி – 67)

வேற்றுமை அணி

செய்யுளில் இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி, பின் அவற்றை ஏதேனும் ஒரு காரணத்தால் வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாகும்.

எ.கா:

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

இக்குறட்பாவில் தீயும் சுடும், தீய சொல்லும் சுடும். இது ஒற்றுமை. தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், ஆனால் நாவினால் சுட்டவடு ஆறாது. இது வேற்றுமை. எனவே, வேற்றுமை அணியாகும்.

இரட்டுற மொழிதல்

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணியாகும். இதனை ’சிலேடை’ என்றும் கூறுவர்.

எ.கா:

பாம்பு - வாழைப் பழம்

நஞ்சிருக்கும் தோல் உரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பட்டால் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

பாடல் பாம்பு வாழைப்பழம்
நஞ்சிருக்கும் நச்சுத்தன்மை உடையதாக இருக்கும் நன்கு (நைந்து) பழுத்து இருக்கும்
தோல் உரிக்கும் குறிப்பிட்ட காலத்தில் தன் மேல்தோல் உரிக்கும் உண்பவரால் தோல் உரிக்கப்படும்
நாதர் முடி மேல் இருக்கும் இறைவனின் முடிமேல் இருக்கும் பஞ்சாமிர்தத்தில் கலந்து இறைவனுக்குச் சாற்றும்போது அவர் முடிமேல் இருக்கும்
வெஞ்சினத்தில் கோபத்தில் உண்டவரின் வாயில்
பட்டால் மீளாது கொத்தினால் உயிர் தப்பாது சென்ற பின் மீளாது.

உயர்வு நவிற்சி அணி

ஒன்றைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறுவது; அதாவது, கற்பனையுடன் அளவுக்கு அதிகமாக உயர்த்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.

எ.கா:

நிலவினில் இருக்கின்ற
களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்துவிடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்துவிடும் (வைரமுத்து)

ஒரு பெண்ணின் வலிமையைக் கூற வந்த வரிகள் இவை. அவள் வலியவள், உயர்ந்தவள் என்பதைக் காட்ட, எட்டாத நிலவின் களங்கத்தை இவளது பெருவிரல் துடைத்துவிடும்; இவள் அணிகின்ற கைவளையல்கள் வலிமைமிக்க சிறைக் கம்பிகளையே உடைத்துவிடும் என்று கவிஞர் மிகைப்படுத்திக் கூறியுள்ளார். எனவே, இது உயர்வு நவிற்சி அணியாகும்.