சிகரம்
(இரண்டாம் பருவம்)
வாழும் முறைகளை இரண்டடிக்குள் வகுத்தவர் அய்யன் திருவள்ளுவர். உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்தவர். பொய்யில் புலவராய் இன்றளவும் போற்றப்படுபவர். அவரை வாழ்த்திப் பாடும் அறிவுமதியின் கவிதையை இந்தப் பகுதியில் காண்போம்.
தந்தை தந்த- அறிவுமதி
பிறந்த குழந்தைக்கான ஊட்டச்சத்து மிக்க முதன்மையான ஆதார உணவு தாய்ப்பால் ஆகும். இந்த உலகுக்கு ஒரு தந்தை கொடுத்த தாய்ப்பால்தான் அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் என்று சொல்லி, திருவள்ளுவரைத் தந்தையோடு ஒப்பிடுகிறார் கவிஞர். பால் தயிராவதற்கு உறை ஊற்றிப் புளிக்கவைப்பார்கள்; இந்த முப்பாலோ எவ்வளவு உரைகள் தோன்றினாலும் புளிக்காது என்கிறார். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று கடல்களில் முகந்து எடுத்த இரு துளிதான் திருக்குறள் என்றும், அந்த அளவுக்கு கருத்தாழம் மிக்கது என்றும் சொல்கிறார். இரண்டு அடிகளாய் அமைந்திருக்கும் குறளில் ஒரு கடலே உள்ளது. வாழ்க்கை எனும் கடலின் கலங்கரை விளக்கமாக வள்ளுவர் சிலை வீற்றிருக்கிறது. இந்தச் சிலை நிறுவப்பட்டதன் பயனாகக் குமரி முனையின் புகழ் இன்னும் மேலோங்கியது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்களாக, 133 அதிகாரத்திலும் உள்ள பத்துப் பத்துக் குறள்களால் வாழ்க்கை வளமாகும். தமிழ் மொழியைச் சுண்டக் காய்ச்சி உருவான ’ஏடு’ திருக்குறள். தமிழ் எனும் நீண்ட பயணத்தின் இரண்டு அடிப் பாதையாகவும், குழந்தைகளைத் திருத்துவதற்காக ஆசான்கள் கொடுக்கும் இரண்டு அடியாகவும் குறளின் இரண்டு அடியை உருவகப்படுத்துகிறார் கவிஞர்.
அறிவுமதி தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவரது இயற்பெயர் மதியழகன். ’நட்புக்காலம்’, ’நிரந்தர மனிதர்கள்’, ’அன்பான இராட்சசி’, ’புல்லின் நுனியில் பனித்துளி’, ’கடைசி மழைத்துளி’ போன்ற கவிதை நூல்களையும் ’வெள்ளைத் தீ’ என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
| 1. | முப்பால் | - | திருக்குறளின் முப்பிரிவுகளான அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால். | ||
| 2. | முக்கடல் | - | இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா | ||
| 3. | உறை ஊற்றுதல் | - | பாலைத் தயிர் ஆக்குவதற்காகப் பாலில் புளிப்பு சேர்த்தல் | ||
| 4. | ஊன்றுகோல் | - | விழாமல் நடப்பதற்குப் பயன்படுத்தும் கைத்தடி | ||
| 5. | ஏடு | - | பாலாடை/ நூல் |