சிகரம்
(இரண்டாம் பருவம்)
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கிறது. பொருளாதார முன்னேற்றம்தான் நாட்டின் எதிர்காலத் திட்டங்களை வகுத்திட உதவுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் அந்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் அதற்கான பொருளாதாரத் திட்டமிடலும் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு வளர்ச்சிப் பொருளாதாரக் கோட்பாட்டை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர், இந்தியப் பொருளாதார மேதை அமர்த்தியா சென்.
மேற்கு வங்கத்தில் 1933இல் பிறந்தார் அமர்த்தியா சென். இவருக்கு ‘அமர்த்தியா’ என்ற பெயரைச் சூட்டியவர் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் ஆவார். அமர்த்தியா சென் இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரக் கல்வியை முடித்தார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். கல்லூரிப் பருவத்தில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார்; உலகே வியக்கும் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கினார். ’ஹோம் இன் தி வேர்ல்ட்’ என்பது இவரது தன்வரலாற்று நூல் ஆகும். இந்நூலில் இவர் உலகையே தன் வீடாகப் பார்ப்பதாகத் தெரிவிக்கிறார்.
1943ஆம் ஆண்டு வங்க தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் மக்கள் கடுமையான துயரங்களைச் சந்தித்தனர். இது அமர்த்தியா சென்னிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மையப்படுத்தித் தமது வளர்ச்சிப் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கினார். அவை அடித்தட்டு மக்களின் நிலையிலிருந்து பொருளாதார இடரை அணுகும் நோக்கையும் போக்கையும் உருவாக்கின.
சந்தைப் பொருளாதாரத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடுபவர் அமர்த்தியா சென். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவரது ஆய்வு நெறியாளராக இருந்த மாரிஸ் டாப்பைப் பின்பற்றியே தன் ஆய்வுகளை ஜனநாயக அடிப்படையில் நோக்குகிறார். மக்கள் பிரச்சினைகள் இன்றுள்ள ஜனநாயக அமைப்புகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர். பொருளாதாரம் குறித்த இவரது ஆய்விற்காகப் பல நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் பொருளாதாரம் குறித்த கொள்கைகளையும் அதன் செயற்பாடுகளையும் நேரில் கண்டறிந்தவர். இதன் பின்னரே தன்னுடைய வளர்ச்சிப் பொருளாதாரக் கோட்பாட்டை உருவாக்கினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் கல்வி மிகவும் அவசியமான ஒன்றாகும். அடிப்படைக் கல்வி அறிவு இல்லாமல் வளர்ச்சி உருவாதல் சாத்தியமில்லை. இதனால், உலகச் சந்தையில் போட்டியிடுவதற்குரிய நவீனத் தொழில்களை வளர்ப்பதும் சாத்தியமில்லை. தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகள் நவீனத் தொழில் வளர்ச்சியில் வெற்றிகரமாக முன்னேறியதற்கான முக்கியக் காரணம், அவர்களது கல்வி முறையே என்கிறார்.
ஒரு நாடு வறுமை ஒழிப்பு, சுகாதாரம், உடல்நலம், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, கல்வி முதலானவற்றில் கவனம்செலுத்த வேண்டும் என்றும், அது சார்ந்த வளர்ச்சித் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். இவற்றைத் தவிர்த்து உலகமயமாக்கலில் மட்டும் தீவிரமாக இருந்தால், அந்த நாடு தனக்குத்தானே பெரும் பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்கிறது என்று அர்த்தம் என்கிறார்.
பொருளாதாரத் துறைக்கு அவர் செய்த பங்களிப்பைப் பாராட்டி 1998ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் வைத்து ‘பிரதிச்சி’ என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு இந்நிறுவனம் உதவுகிறது. இந்திய அரசும் இவர்தம் பங்களிப்பைப் பாராட்டி 1999ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது.
| 1. | நிறைவு | - | முழுமை | ||
| 2. | வகுத்தல் | - | வகைப்படுத்தல் | ||
| 3. | மேதை | - | அறிவாளி | ||
| 4. | வியத்தல் | - | ஆச்சரியப்படுதல் | ||
| 5. | பஞ்சம் | - | பொருள் பற்றாக்குறை |