சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.6 கேட்டல் கருத்தறிதல்

ஜெயலட்சுமி

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நடத்திய தேர்வில் வெற்றிபெற்று நாசா செல்வதற்குத் தேர்வானவர் மாணவி ஜெயலட்சுமி. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். வறுமையான குடும்பச் சூழலில், அரசுப் பள்ளியில் படித்துவந்தார். இவர் வீட்டில் சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டு, சிறப்பாகப் படிப்பதுடன் மாலை நேரத்தில் கூலி வேலைக்கும் சென்று ஒற்றை ஆளாய்த் தன் குடும்பத்தையும் காப்பாற்றிவந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதையடுத்து, நாசா மையத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றார் ஜெயலட்சுமி. இவர் நாசா செல்லப் பலரும் உதவினர்.

அச்சூழலில் கிராமாலயா என்னும் தொண்டு நிறுவனம், ஜெயலட்சுமிக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தது. அப்போது அவர் தனக்குப் போதுமான பணம் கிடைத்துவிட்டதாகவும் ஏதேனும் உதவ வேண்டுமென நினைத்தால் அவரது குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித்தருமாறும் கேட்டுக்கொண்டார். தான் வறுமையான, வீடற்ற சூழலில் இருந்தபோதும் தனக்குத் தேவையானதை மட்டும் கேட்காமல், ஊருக்காக வேண்டுகோள் வைத்த மாணவியைக் கண்டு அந்தத் தொண்டு நிறுவனம் வியந்தது.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் என்பவரின் மேற்பார்வையில் ஆதனக்கோட்டையில் ஜெயலட்சுமி குடியிருக்கும் திருவள்ளுவர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 126 வீடுகளில் தலா `20 ஆயிரம் செலவில் 126 கழிப்பறைகளும் குளியலறைகளும் கட்டிக்கொடுத்தனர். தன்னைப் பற்றி மட்டும் நினைக்காமல் தன்னுடைய கிராமமே பயன்பெற வேண்டும் என்று முடிவெடுத்த இந்த மாணவியின் மனிதநேயம் போற்றுதலுக்குரியது.

வினாக்கள்

மாணவி ஜெயலட்சுமி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிராமாலயா.

ஜெயலட்சுமி தனது குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித்தருமாறு கோரிக்கை வைத்தார்.

126 கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டன.

தன்னைப் பற்றி மட்டும் நினைக்காமல் தன்னுடைய கிராமமே பயன்பெற வேண்டும் என்று முடிவெடுத்த மாணவி ஜெயலட்சுமியின் மனிதநேயம் போற்றுதலுக்குரியது.